நடிகர் சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பல்வேறு சர்ச்சைகளை கடந்து நவம்பர் 25ஆம் தேதி திரைக்கு வந்தது 'மாநாடு'. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் மூலம் சிம்பு மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியுள்ளார்.
'மாநாடு' திரைக்கு வந்து 25 நாள்களைக் கடந்த நிலையில் அண்மையில் படக்குழு சார்பில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் சிம்பு பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில், படப்பிடிப்புக்குச் சென்றதால் சிம்பு வெற்றி விழாவுக்கு வரவில்லை.
இந்நிலையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகி வாசுவை நேற்று (டிசம்பர் 24) நடிகர் சிம்பு சந்தித்துள்ளார். அத்துடன் விரைவில் ரசிகர்களைத் தனியாகச் சந்தித்து 'மாநாடு' பட வெற்றிக்காக நன்றி கூற ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார்.
அதன்படி வரும் ஜனவரி 6ஆம் தேதி சிம்பு தனது ரசிகர்களைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: மாநாடு 25ஆவது நாள் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நன்றி!