சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்தவர் சிவா (58). இவர் அம்மா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் சினிமா பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இத்தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் வளசரவாக்கத்தில் உள்ள காமகோடி நகரில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், சிவா கடந்த 16ஆம் தேதி இரவு வழக்கம் போல் அலுவலகத்தை மூடிவிட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து, நேற்று மதியம்(ஜூலை 17) அலுவலகத்திற்குச் சென்று பார்த்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிறகு உள்ளே சென்று பார்த்தபோது, 5 லட்சம் மதிப்பிலான கேமரா, 1.17 லட்ச ரூபாய் பணம் மற்றும் 250 கிராம் வெள்ளி பொருள்கள் காணாமல் போனது தெரியவந்தது. உடனே இச்சம்பவம் குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சிவா புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அங்குள்ள சிசிடிவியில் பதிவானக் காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை செய்ததில் இரண்டு நபர்களின் கைரேகை பதிவாகியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இத்தயாரிப்பு நிறுவனம் 'சார்லி சாப்ளின் 2' , 'கடவுள் இருக்கான் குமாரு' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.