சென்னை: நடிகர் ஆரி அர்ஜுனனின் 'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளை சார்பில் ஃபெப்சி தொழிலாளர்களுக்கான இலவச இயன்முறை மருத்துவ சிகிச்சை முகாம் சென்னை வடபழனியில் உள்ள ஃபெப்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமை தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆரி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு எனக்கு தோள்பட்டையில் பிரச்னை ஏற்பட்டது. திருவண்ணாமலையில் 1 மாதம் தங்கி இயன்முறை சிகிச்சை எடுத்தேன், அதன் பிறகு சரியாகிவிட்டது.
நோயாளிகளுக்கு பெரியளவில் மருத்துவ செலவு ஏற்படுவதை தடுக்க இயன்முறை மருத்துவம் உதவுகிறது. செய்தியாளர்கள், சினிமா, தொழிலாளர்கள், வணிகர் சங்கம் உட்பட அனைவருக்கும் இலவச இயன்முறை சிகிச்சை வழங்க தயாராக உள்ளேன்.
புற்றுநோய், இயற்கை உணவுமுறை குறித்தும் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்தும் எனது 'மாறுவோம் மாற்றுவோம் ' அறக்கட்டளை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன் என்று கூறினார்.
மருத்துவ முகாமில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய qபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்படத் தொழிலாளர்களின் நலன் கருதி தமிழக அரசு புதிய அறிவிப்பு ஏதேனும் வெளியிட வேண்டும். 'அனைவருக்கும் வீடு' திட்டத்தில் 30 லட்சம் வீடு கட்டும் கொள்கை முடிவை எடுத்துள்ள அரசு, அதில் 5ஆயிரம் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தர வேண்டும்.
ஃபெப்சி எனும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் , அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பான AIFEC உடன் இணைக்கப்பட்ட சம்மேளனங்களில் ஒன்று.
இந்த ஐஃபெக் கூட்டமைப்புடன் உள்ள 5 சம்மேளனங்களுடனும் , ஃபெப்சியில் உள்ள 24 சங்கங்களுடனும் 40 ஆண்டுகளாக இணைந்து பணி செய்து வருகிறோம்.
இனி வரும் காலத்தில் ஃபெப்சியின் 24 சங்கங்கள் மற்றும் ஐஃபெக்கில் இணைக்கப்பட்டுள்ள சம்மேளங்களுடன் மட்டுமே இணைந்து பணி செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெப்சி உறுப்பினர்கள் இவர்களுடன் மட்டுமே இனி வரும் காலத்தில் இணைந்து பணியாற்றுவார்கள் என்றார்.
இதையும் படிங்க: பெற்றோருக்கு வாழ்நாள் தண்டனை கொடுக்காதீர்கள் - சூர்யா உருக்கம்