கமல்ஹாசன், ராணி முகர்ஜி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ‘ஹே ராம்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில், ‘ஹே ராம்’ படத்தில் பணிபுரிந்த அனுபவம் மற்றும் நினைவுகளை நடிகை ராணி முகர்ஜி பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து ராணி முகர்ஜி, ‘ஹே ராம்’ என் திரைப் பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம். நான் மிகவும் ரசிக்கும் நடிகர் கமல், அவர் இயக்கத்தில் அவருடன் பணிபுரிவதை எனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக கருதினேன், அதனால் அந்த வாய்ப்பை நான் நழுவவிட மனமில்லை. உடனடியாக படிப்பிடிப்புக்காக சென்னை கிளம்பிவிட்டேன்.
‘ஹே ராம்’ படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒவ்வொரு நொடியும் இனிமையானது. குறிப்பாக அந்த படப்பிடிப்பு தளத்தில் பின்பற்றப்பட்ட ஒழுக்கம் எனக்கு பிடித்திருந்தது. படப்பிடிப்பு தொடங்கும்போது மணி ஒலிக்கும், கலைஞர்களின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் தனித்தனி நேரம் ஒதுக்கப்படும்.
தற்போது பின்பற்றப்படும் பல விஷயங்கள் அப்போதே ‘ஹே ராம்’ படப்பிடிப்பு தளத்தில் முறையாக பின்பற்றப்பட்டது. ‘ஹே ராம்’ படப்பிடிப்பில் முதல் ஷாட் காலை 6 மணிக்கு தொடங்கும், தொடக்க மணி ஒலித்த பின்பு யாரும் படப்பிடிப்பு தளத்தை விட்டு நகரக்கூடாது.
அதேசமயம் படப்பிடிப்பு முடிவு பெறுவதற்கான மணி ஒலித்த பின்பு ஷூட்டிங் அப்படியே நிறுத்தப்படும். அடுத்த நாள்தான் மற்ற காட்சிகளை எடுப்பார்கள். இது எனக்கு முற்றிலும் புதுமையான அனுபவமாக இருந்தது.
கமல்ஹாசன் சொன்ன அறிவுரை:
இதுகுறித்து ராணி, நான் குட்டையாக இருப்பதால் பிளாட்பார்ம் ஸ்லிப்பர்களை (platform slippers) பயன்படுத்தி வந்தேன். அதனைக் கண்ட கமல்ஹாசன், என்ன இது என்று என்னிடம் வியப்பாக கேட்டார். நான் குட்டையாக இருப்பதால் எனக்கு பிளாட்பார்ம் ஸ்லிப்பர்களை அணிவது வசதியாக இருக்கிறது என கூறினேன்.
இதற்கு கமல், உங்களுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா?, சாதாரண செருப்பே அணிந்து கொள்ளுங்கள். உங்கள் உயரத்தை வைத்து யாரும் உங்களை எடை போட முடியாது, நீங்கள் சாதித்ததை வைத்துதான் என்றார்.
இந்த வார்த்தைகள் என் மனதில் அப்படியே பதிந்தது. அன்று முதல் உயரம் பற்றிய என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். எனக்கு தன்னம்பிக்கை அதிகமானது. ஒரு நடிகராக இருப்பதற்கு உயரம் முக்கியமில்லை, நடிப்புத்திறன் தான் முக்கியம் என்பதை உணரச் செய்த கமல்ஹாசனுக்கு இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் ‘ஹே ராம்’ படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்ததையும் நான் பெரிய பாடமாக கருதுகிறேன் என ராணி முகர்ஜி தெரிவித்தார். கமல்ஹாசன் இயக்கும் விதத்தை பார்த்து நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
முதல்நாள் படப்பிடிப்பு தளத்துக்கு சென்றபோது, கமல் என்னைப் பார்த்து முகத்தைக் கழுவிவிட்டு வாருங்கள் என்றார். என்ன சொல்கிறார் என நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது, மீண்டும் ஒருமுறை அதையே திரும்ப சொன்னார். பின்னர் நான் முகத்தை கழுவ சென்றுவிட்டேன்.
ஒரு நடிப்பு கலைஞராக நீங்கள் மேக்கப் இல்லாமல் கேமராவை எதிர்கொள்வது பாதுகாப்பற்றதாக தோன்றும். நான் முகத்தை கழுவிவிட்டு கமல் முன்பு நின்றேன், அவர் மீண்டும் முகத்தை கழுவ சொன்னார். நான் முகத்தை கழுவிவிட்டேன் என்றேன், நீங்கள் ஷூட்டிங் முடிந்து செல்லும்போது உங்கள் முகம் எப்படி இருக்குமோ அதுபோன்று கழுவ வேண்டும் என்றார்.
நான் அத்தனை மேக்கப்களையும் கழுவி விட்டு வந்து நின்றேன். எனக்கு குங்குமப் பொட்டை வைத்த கமல், மேக்கப்மேனை அழைத்து கண்ணுக்கு சிறிதளவு மையிடச் சொன்னார். ‘அபர்ணா’ கதாபாத்திரம் இப்படிதான் உருவானது என ராணி முகர்ஜி நெகிழ்ந்து பேசினார்.
மேலும் அவர், இந்த சம்பவத்துக்குப் பிறகு நடிகர்களுக்கு மேக்கப் முக்கியம் கிடையாது. நீங்கள் மேக்கப் இல்லாமல் படங்களில் நடிக்கலாம். கேமராமேன் பயன்படுத்தும் ஒளி, லென்ஸ் உள்ளிட்டவற்றை பொறுத்துதான் நாம் திரையில் தெரிவது என உணர்ந்துகொண்டேன். என்னுடைய தன்னம்பிக்கையை பெரிதும் உயர்த்தியது ‘ஹே ராம்’ படப்பிடிப்பு என்றார்.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்துகள் முட்டாள்தனமானது - சோனம் கபூர்