சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்று (செப்.25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ராமோஜி குழுமத் தலைவரும், எஸ்பிபியின் நண்பருமான ராமோஜி ராவ் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''பாலு இனி இல்லை என்ற உண்மையால் நான் சோகமாக இருக்கிறேன். அவர் ஒரு புகழ்பெற்ற பாடகர் மட்டுமல்ல, எனக்கு மிக நெருக்கமான தோழர். ஆழ்ந்த பாசத்துடன் என்னைக் கட்டிப்பிடிக்கும் ஒரு சகோதரர்.
அவரது குரல் இசை உலகத்திற்கு கிடைத்த சிறந்த பரிசு. அவரது 50 ஆண்டு திரைப் பயணத்தில் அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் பரவசமான பொக்கிஷங்கள். அவரது இனிமையான இசை, பாடல்களை நினைவில் வைத்துக் கொண்டு, அவருடன் கழித்த நல்ல நேரங்கள் நம்மை கண்ணீரில் ஆழ்த்துகின்றன.
துக்கமான இந்த நேரத்தில் சோகத்தைக் கூற வார்த்தைகள் இல்லை. பாலு... இது உங்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி '' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எஸ்.பி.பி இழப்பை தாங்க முடியவில்லை’- கதறி அழுத கோலிவுட் பிரபலங்கள்!