சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. அத்திரைப்படம், விமர்சகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனையடுத்து, ரஜினி சில காலம் ஓய்வு எடுத்துவந்தார்.
ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்குவார்கள் என்ற பேச்சு அடிபட்டு வந்த நிலையில், ’கோலமாவு கோகிலா’, ’டாக்டர்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நெல்சன் தற்போது நடிகர் விஜயை வைத்து ’பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து, ரஜினி படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இது ரஜினியின் 169ஆவது படம்.
இந்நிலையில்,ரஜினியின் 170வது படம் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரஜினியின் இந்த படத்தை 'கனா' படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போனிகபூர் இதனை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. போனி தற்போது அஜித் நடித்துள்ள 'வலிமை' படத்தை தயாரித்துள்ளார்.
மேலும், அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் உதயநீதி ஸ்டாலின் நடிப்புல் வெளிவரத் தயாராக உள்ளது. அந்தத் திரைப்படத்திற்கும் தயாரிப்பாளர் போனி கபூர்தான். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.