வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'சிண்ட்ரெல்லா' திரைப்படம் இன்று (செப் 24) திரையரங்குகளில் வெளியானது . இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (செப் 23) நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகை ராய் லட்சுமி, "நீண்ட நாளைக்குப் பிறகு உங்களை எல்லாம் பார்க்கிறேன். ஒரு பெரிய போருக்குப் பிறகு சந்திப்பதுபோல் இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு புன்னகையுடன் கூடிய உங்கள் முகங்களைப் பார்க்கிறேன். இனி இது தொடரும் என்று நம்புகிறேன்.
திகில் பேண்டஸி
'சிண்ட்ரெல்லா' திகில் பேண்டஸி கலந்த வித்தியாசமான படம். நிறைய திகில் படங்களை நீங்களும், நானும் பார்த்திருக்கிறோம். ஆனால் இது வழக்கமான திகில் படங்கள் போல் இல்லாமல், வித்தியாசமாக இருக்கும். 'காஞ்சனா', 'அரண்மனை' போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு, அதே மாதிரி கதையுள்ள படங்களே எனக்கு வந்தன. அதனால் அவற்றை நான் தவிர்த்துவிட்டேன்.
ஆனால் படத்தின் இயக்குநர் என்னிடம் கதை சொல்லிவிட்டு, 'சிண்ட்ரெல்லா' என்று தலைப்பு சொன்னதும், அதில் நான் கவரப்பட்டேன். படத்தில் நான் மூன்று வேடத்தில் நடித்திருக்கிறேன். நான் வேலைக்காரி வேடத்தில் நடிக்கவேண்டும் என இயக்குநர் சொன்னபோது, ஒரு நிமிடம் தயங்கினேன். படத்தை மறுத்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.
மூன்று படங்களில் பணிபுரிந்த அனுபவம்
ஆனால் அவர் என் மேல் நம்பிக்கை வைத்துப் பேசினார். கதையில் மனம் கவரப்பட்டு ஒப்புக்கொண்டேன். ஏனென்றால் அந்த அளவிற்கு அவர் என் மேல் நம்பிக்கை வைத்து அதை விவரித்தார். இந்தப் படம் ஒரு பிரமாண்டமான அனுபவத்தைக் கொடுத்தது.
ரோபோ சங்கருடன் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் மறக்க முடியாதவை. பல காட்சிகளை மேம்படுத்த அவர் உதவினார். இந்தப் படம் திரையரங்குகளில்தான் வெளியாக வேண்டும் என்று இருந்தோம். அதன்படி இப்போது காலம் கை கூடி வந்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவம், மூன்று படங்களில் பணிபுரிந்த அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது" எனக் கூறினார்.