மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தர்மதுரை'. சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதற்கிடையில் இத்திரைப்படம் வெளியாகி நேற்றுடன் (ஆக. 19) நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் காணொலி ஒன்றைப் பேசி வெளியிட்டுள்ளார்.
அதில், "தர்மதுரை திரைப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது. இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, தர்மதுரையின் ஒட்டுமொத்த குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி. தர்மதுரை 2 திரைப்படத்தின் பணிகள் நடந்துவருகின்றன. விரைவில் இயக்குநர் சீனு ராமசாமி நல்ல கதையோடு வருவார்.
எனது நான்கு படங்கள் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது. கரோனா தொற்று பிரச்னை தீர்ந்தவுடன் படங்கள் திரைக்கு வரும்" என்று கூறியுள்ளார்.
விரைவில் 'தர்மதுரை 2' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.