சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் 2016இல் திரைக்கு வந்த படம் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன் '. இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். படம் எதிர்பாரத வெற்றியை பெறாமல் தோல்வியை சந்தித்தது.
இதனால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மைக்கேல் ராயப்பனுக்கும், சிம்பு, அவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது.
திட்டமிட்டு ஏமாற்றிய சிம்பு
இந்நிலையில், மைக்கேல் ராயப்பன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படப்பிடிப்பில் சிம்பு சரியாக கலந்து கொள்ளவில்லை. பெரிய பிரச்சினைகளுக்கு பிறகுதான் படத்தில் நடித்தார்.
இந்தப் படத்திற்காக சிம்பு கேட்டுக்கொண்டபடி பாங்காக் உள்ளிட்ட நாடுகளில் லொகேசன் பார்த்தோம். படக்குழுவினர் 40க்கும் மேற்பட்டோர் சிம்புவிற்காக பாங்காக்கில் காத்திருந்தனர். ஆனால் சிம்பு அங்கு செல்லவே இல்லை. பாதி படத்துடன் படப்பிடிப்பை நிறுத்தி, படத்தை வெளியிட சொன்னார்.
வெளியீட்டின் பிறகு நட்டம் ஏற்பட்டால், தான் பொறுப்பேற்று கொள்வதாகவும் எனது தயாரிப்பில் இலவசமாக ஒரு படம் நடித்து தருவதாகவும் உறுதியளித்தார். முழு படப்பிடிப்பு நடக்காததால் படம் தோல்வியடைந்தது. சிம்பு கூறியபடி புதிய படத்தில் நடித்து தரவில்லை.
அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' நட்டத்தால் விநியோகஸ்தர்கள் தரப்பில் எனக்கு அழுத்தம் தரப்பட்டது. என்னை திட்டமிட்டு ஏமாற்றியுள்ளார் சிம்பு. சிம்புவிற்கு சம்பளப் பாக்கி இருப்பதாக முரண்பட்ட கருத்தை , பொய்யான தகவலை செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து கூறுகிறார்கள்.
அடுக்கு மொழியில் பேசுவதால் பொய் உண்மையாகாது
டி.ராஜேந்தர் படத்தின் லாபம் , நட்டம் தயாரிப்பாளரை சார்ந்தது என்கிறார் . எனக்கு நட்டம் ஏற்படுத்திய எந்த நடிகர்களிடம் நான் பணம் கேட்டதில்லை. ஆனால் நட்டத்திற்கு பொறுப்பேற்று புதிய படம் நடித்து தருவதாக சிம்பு ஏமாற்றியதால்தான் நியாயம் கேட்கிறேன்.
இது எனது உரிமை. படத்தில் 2 கதாபாத்திரத்தில் நடித்து 2கதாபாத்திரத்தில் நடிக்காமல் விட்டுவிட்டார் சிம்பு. தயாரிப்பாளர் , விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் சிம்பு படத்திற்கு ரெட் கார்ட் போடுவதாக பொய் கூறுகிறார்கள்.
தயாரிப்பாளர் சங்கத்தினர் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் என்றால் அதில் ஏன் டி.ஆர் உறுப்பினராக இருக்கிறார். சங்க தேர்தலில் ஏன் பங்கேற்றார். எனது படத்திற்காக டி.ஆர் எங்கும் கடன் வாங்கவில்லை. அவர் தரங்கெட்டு பேசுகிறார்.
அடுக்கு மொழியில் பேசுவதால் பொய் உண்மையாகாது. சிம்பு குடும்பத்தினர் குடும்பத்துடன் பொய் கூறுகிறார்கள். படம் தொடர்பாக இனி புகாரளிக்க நானும் தயார் . எந்த நடிகரும் சிம்பு போல மாற்றி பேசமாட்டார்கள்.
சிம்பு குடும்பத்தினர் அடாவடித்தனம்
எனக்கு ஏற்பட்ட நட்டத்தில் ரூ. 15 கோடியில் 5 காசு கூட சிம்பு தரவில்லை. டி.ஆர் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை என்னிடம் அனுப்பியதே சிம்புதான். என்னை திட்டமிட்டு ஏமாற்றியுள்ளார் சிம்பு.
சிம்பு எனக்கு கால்சீட் தர வேண்டும். ஒரு படத்திற்கு தற்போது சிம்பு ரூ. 15 கோடி வாங்குவதாக கூறுகிறார்கள். சிம்பு குடும்பத்தினர் அடாவடித்தனம் செய்கிறார்கள். சிம்புவிற்கு 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' கொடுத்த சம்பளம் தொடர்பாக வெளிப்படையாக கூற முடியாது.
'மாநாடு' படம் தீபாவளிக்கு ஏன் வரவில்லை என அப்படத்தின் தயாரிப்பாளர் தெளிவாக கூறிவிட்டார். நான் 'மாநாடு' வெளியீட்டை தடுக்கவில்லை. மாஃபியா, கந்துவட்டி கும்பல் என யாரை கூறுகிறார் டி.ஆர் ,அதை தெளிவுபடுத்த வேண்டும். நீதிமன்றத்தில் என் மீது மான நஷ்ட வழக்குதான் தொடர்ந்துள்ளனர். 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படம் தொடர்பாக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.
சுரேஷ் காமாட்சி சிம்பு பற்றிய உண்மையை கூறுவார்
செய்தியாளர் சந்திப்பு மூலம் தயாரிப்பாளர் சங்கத்தை மிரட்டி வருகிறார் டி.ஆர். அவரது தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 7 பேரில் 6 பேர் விலகி விட்டனர் . கட்டப்பஞ்சாயத்து செய்யதான் அதை உருவாக்கினார் டி.ஆர்.
சிம்பு 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் அழைத்தாலும் வருவதில்லை. இந்தப் பிரச்சினைக்கு சிம்புவின் அம்மா, அப்பாதன் காரணம். சிம்பு என்னை அண்ணன் என்று அழைத்துதான் பேசுவார். அவரை வெளியில் வர விட மாட்டேன் என்கிறார்கள்.
சிம்பு குறைந்த நாட்களிலேயே 'மாநாடு' படத்தை முடித்து கொடுத்ததாக கூறும் சுரேஷ் காமாட்சி, படம் வெளிவந்த பிறகு சிம்பு பற்றிய உண்மையை கூறுவார். சிம்புவை வைத்து படம் எடுத்தபோது நானும் இப்படித்தான் கூறி வந்தேன் " என்றார்.
இதையும் படிங்க: நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் பரபரப்பு புகார்!