சென்னையில் உள்ள மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி, சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சிறந்த பாடகருக்கான தேசிய விருதை எஸ்.பி.பி பெயரில் வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்.பி.பி மறைவை கேள்விப்பட்டதிலிருந்து என்னால் இப்போது வரை வழக்கமான நபராக இருக்க முடியவில்லை. அந்தளவுக்கு அவருடைய மறைவு என்னை பாதித்துள்ளது.
எஸ்.பி.பி மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஏனென்றால் கடந்த 50 ஆண்டுகளாக அவர் இசையுலகில் ஆற்றியிருக்கும் சாதனையை, வேறு யாரேனும் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை.
ஆறு முறை தேசிய விருதும், பத்மபூஷன் விருதும் வாங்கியுள்ளார். இந்த பூலோகத்தில் இசை இருக்கும் வரை எஸ்.பி.பி சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியாக இருப்பார். எஸ்.பி.பியின் சாதனையைப் போற்றும் விதமாக சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதினை எஸ்.பி.பி பெயரில் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் எஸ்.பி.பியின் பெயர் காலத்துக்கும் நிலைத்து நிற்கும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகினரின் கருத்தும் கூட” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’கடவுள் பரிசளித்த குரல்’ - எஸ்.பி.பி குறித்து அமிதாப்பச்சன்!