இயக்குநர் ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. இதில் பார்த்திபன், பாக்கியராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கரோனா தொற்றால் திரைப்படங்களின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே இந்தப் படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது.
இதுதொடர்பாக தியேட்டர் ஓனர் அசோசியேஷன் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "இன்று ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்று திரையரங்கு உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
2D நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளிவர இருந்த 'பொன்மகள் வந்தாள்' என்ற திரைப்படம் திரைக்கு வராமல் நேரடியாக OTTல் வெளிவரப்போவதாக செய்தி வந்தது. மொத்த திரையுலகமும் நெருக்கடியில் இருக்கும்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடைமுறையில் உள்ள பழக்கத்தை தகர்த்து 1000 திரையரங்க உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக தயாரிப்பாளரை தொடர்புகொண்ட பேசியபோது அவர் எங்களது கோரிக்கைகளை ஏற்பதாக இல்லை. ஆதலால் இனி அந்த தயாரிப்பாளர் மற்றும் அவரை சார்ந்தோர் வெளியிடும் அனைத்து படங்களையும் OTT Platformல் மட்டுமே வெளியிட்டு கொள்ளட்டும் என்பது அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.