திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் நேற்று முன்தினம் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கடந்த இரு தினங்களாக சிறுவனை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அது அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அடுத்த முயற்சியாக தற்போது சிறுவன் விழுந்த ஆழ்துளைக் கிணறு அருகே மற்றொரு ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்தக் குழியில் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த வீரர்கள் இறங்கவுள்ளனர். இதனிடையே தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குழாயில் வீழ்ந்த குழந்தையை மீட்க நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்திக் கண்ணீரோடு கைதட்டுகிறேன்’ என்று பதிவிட்டிருந்தார்.
முன்னதாக இன்று காலை மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சுஜித்தின் மீட்பு பணிகள் வெற்றியடைய வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். நேற்று சுஜித்திற்காக பல்வேறு பிரபலங்களும் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.