ஹாலிவுட் சினிமாவில், மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஆஸ்கர். ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா ஆண்டு தோறும், பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், 2021ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள 93ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, பிப்ரவரி மாதத்துக்கு பதிலாக, ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் தற்போது அறிவித்துள்ளது.
ஆஸ்கர் விருதுகளுக்கான படங்களை 2020ஆம் ஆண்டு டிசம்பர் தொடங்கி 2021ஆம் ஆண்டு பிப்ரவரி வரை பரிந்துரைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் வழக்கமாக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த வருடம் முதல் சவுண்ட் மிக்ஸிங், சவுண்ட் எடிட்டிங் ஆகிய பிரிவுகளை ஒன்றிணைத்து 23 பிரிவுகளாக்க முன்னதாக முடிவெடுக்கப்பட்டது.
கரோனா தொற்றால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்படும் படங்களும் 2021ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்குத் தகுதி பெறும் எனவும் ஆஸ்கர் குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : த்ரிஷாவின் திடீர் முடிவு - சோகத்தில் ரசிகர்கள்!