தமிழ்நாடு - கர்நாடகா - கேரளா என மூன்று மாநில வனத்துறையினருக்கும் அரசுகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர், சந்தனக் கடத்தல் வீரப்பன்.
இவரைப் பற்றி ஏற்கெனவே ஆவணப்படங்கள், குறும்படங்கள், 'சந்தனக்காடு' என்ற தொலைக்காட்சித் தொடர், 'வன யுத்தம்' என்ற திரைப்படம் என நிறைய வெளிவந்துள்ளது.
தற்போது ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் எழுதிய 'சேசிங் தி பிரிகண்ட்' (Chasing the Brigand) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, வெப் சீரிஸ் ஒன்று தயாராக உள்ளது. இந்த வெப் சீரிஸை E4 என்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளது. இது இந்நிறுவனத்தின் முதல் வெப்சீரிஸ் ஆகும்.
E4 என்டர்டெயின்மென்ட் அறிக்கை இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் எழுதிய 'வீரப்பன்: சேசிங் தி பிரிகண்ட்' புத்தகத்தின் பதிப்புரிமையை E4 என்டர்டெயின்மென்ட் பெற்றுள்ளது. ஊரடங்குத் தளர்வுகள் நீக்கப்பட்ட உடன், இதன் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் பதிப்புரிமைக்கு உட்பட்டவை. இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளது.இந்த வெப் சீரிஸில் நடிக்கும் கதாபாத்திரங்கள், இயக்குநர், தொழில் நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.