இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை செலுத்தியது.
இதனைத் தொடர்ந்து, இம்மாதம் 2ஆம் தேதி சந்திரயான்-2இன் வட்டமடிப்பானிலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது. பின், விக்ரம் லேண்டர் விண்கலம் இன்று அதிகாலை 1:30 மணி முதல் 2:30 மணியளவில் தரை இறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இதனைக் காண்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திற்கு வருகைபுரிந்தார். மேலும் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதைக் காண நாடு முழுவதும் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
விக்ரம் லேண்டர் நிலவுக்கு 2.1 கி.மீ. தொலைவில் இருக்கும்போது அதிலிருந்து இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரின் தரவுகளை ஆராய்ந்து விக்ரம் லேண்டரின் நிலைகுறித்து சரியான தகவல்களை தெரிவிப்பதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்தார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ தலைவர் சிவனைத் தோளில் தட்டிக்கொடுத்து நம்பிக்கையூட்டினார். இந்த நிகழ்வில் நடிகர் மாதவன் இஸ்ரோ அறிவியல் அறிஞர் நம்பி நாராயணனுடன் கலந்துகொண்டார். இவரது வாழ்க்கையைத்தான் மாதவன் 'ராக்கெட்ரி' என்ற படத்தை இயக்கியும் நடித்தும்வருகிறார்.
இறுதி நேரத்தில் நிலவில் தரையிறங்க முடியாமல்போனது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மாதவன், "எதுவாக இருந்தாலும் சரி... இது சரித்திர நிகழ்வே. எனக்கென்னவோ விக்ரம் லேண்டரை நிலைநிறத்தும் ஃபைன் பிரேக்கிங் த்ரஸ்டர்கள் குளிர்ச்சியால் உறைந்து மூடியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
நிலாவின் தென் துருவ ஆராய்ச்சியில் 90% வட்டமடிப்பானே மேற்கொள்ளும். கடவுளின் ஆசியில் அது பத்திரமாகவே இருக்கிறது. இதனால் இந்த மிஷன் இன்னும் வெற்றிகரமாகவே இருக்கிறது" என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.