லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகியுள்ள "நட்புனா என்னானு தெரியுமா" படக்குழு, பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் படத்தின் நடிகர்கள் கவின், ராஜீ, அருண்ராஜா காமராஜ், ரம்யா நம்பீசன், இசையமைப்பாளர் தரண், தயாரிப்பாளர் ரவீந்தரன் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில் நடிகர் கவின் பேசுகையில்,சொந்த பிள்ளைகளுக்கே சொத்தினை பிரித்து கொடுக்க முடியாத நிலையில் எங்களுக்காக நம்பிக்கை வைத்து கோடிக்கணக்கில் செலவு செய்த தயாரிப்பாளருக்கு நன்றி. கல்யாணம் பண்ணிப்பார் வீட்டை கட்டிப்பார் என்ற பழமொழியில் ஒரு படத்தை எடுத்துப்பார் என்றும் சேர்த்துக்கொள்ளலாம், அவ்வளவு கடினம் என்றார்.
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பேசுகையில், இப்படத்தை வெளியிடவே முடியாது என கூறியவர்கள்தான் அதிகம். இதை வெளியிட முடியும் என முதலும் கடைசியுமாய் நம்பியே ஒரே ஆள் என் அம்மாதான். நான் முதல்நாள் எப்படி என் இயக்குநர் மீது நம்பிக்கை வைத்தேனோ, அதே நம்பிக்கை கடைசிவரை இருந்ததால் படத்தை வெளியிட்டேன்.
பத்திரிகை செய்திகளால்தான் ஒரு காட்சியாக இருந்த இடங்களில் காட்சிகளை அதிகரித்தனர், திரையரங்குகளும் அதிகரித்துள்ளது. இதுதான் பத்திரிகையின் சக்தியே. இப்படம் நஷ்டம் என்று தெரிந்தும் ரிலீஸ் செய்தேன், இப்படம் செத்து போய்விடக்கூடாது என்று முயற்சிகள் எடுத்தேன்.
ஒருநாள் இல்லை ஒருநாள் தோற்று மிகப்பெரிய தயாரிப்பாளராய் வருவேன். ஒரு சின்ன படம் எளிதில் வருவதில்லை, உண்டியலில் போடும் பணத்தை போல நினைத்துதான் இதுபோல் படம் எடுக்கிறேன். கண்டிப்பாக ஒரு நாள் திரும்ப வரும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சின்ன படங்களை வெளியிடுவதில் உள்ள சிக்கல்களை தயாரிப்பாளர் சங்கத்தினால் எப்போதும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. சினிமாவில் 99 விழுக்காடு திருடர்கள்தான், சினிமாவிலும் அரசியல்தான் செய்கிறார்கள். மேலும் தயாரிப்பாளராக நினைப்பவர்கள் அதை மட்டுமே நம்பி வராமல், பணம் போனாலும் பரவாயில்லை என்ற அளவில் வைத்திருப்பவர்கள் முயற்சி செய்யலாம் என்றார்.
மேலும் அவர், வட்டிக்கு வாங்கி படம் எடுக்க நினைத்து படம் எடுக்க வேண்டாம், நான் யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. ஒரு படம் எடுத்து வெளியிடுவதில் பல சிக்கல்கள் உள்ளது. அரசு அலுவலர் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிப்பது தற்காலிகமானதுதான் என்றார்.