இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் காரணமாக, அடுத்த மாதம் 21ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய நிறுவனங்கள் தொடங்கி சிறிய நிறுவனங்கள் வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் திரைப்பட படப்பிடிப்புகள், இசை கச்சேரிகள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதனால் தங்களுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு தவில் நாதஸ்வர இசை பண்பாட்டு நிறுவனம் சார்பில் கூறப்படுகிறது. மேலும் வாழ்வாதாரமின்றி தவிக்கும் தங்களின் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அந்நிறுவனம் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளனர்.
அதில் “தமிழ்நாட்டில் தற்சமயம் கரோனா நோய் பரவாமல் தடுத்து மக்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. நாங்களும் அதன் முக்கியத்துவம் அறிந்து அதனைப் பின்பற்றுகிறோம். ஊரடங்கு உத்தரவினால் எங்களது அனைத்து கலை நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் மட்டுமே திருவிழா காலங்களாகும். இந்தக் காலம் எங்களது கலை தொழிலில் மிக முக்கியமான காலங்களாகும். இம்மூன்று மாதங்களில் கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் எங்களது ஒரு வருட வாழ்க்கைத் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்துகொண்டிருக்கிறோம்.
ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் நாங்கள் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்கிறோம். எந்த ஒரு வருமானமும் இன்றி எங்களது வாழ்வாதாரம், கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு, இசைக் கலைஞர்களாகிய எங்களுக்கு ஏதேனும் நிதி உதவிசெய்து காக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்