அழுத்தமில்லாத கதை, வெட்டியாக சுற்றும் ஹீரோ, கூடவே சுற்றும் காமெடியன், டாஸ்மாக் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், கலகலப்பான திரைக்கதை என்று தமிழ் சினிமாவில் தனி ட்ரெண்டை உருவாக்கியவர் ராஜேஷ். முதல் படமான சிவா மனசுல சக்தி(எஸ்எம்எஸ்), பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, சரவணனும் வாசுவும் ஒண்ணா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு, ஆல் இன் ஆல் அழகுராஜா என இவர் இயக்கிய அனைத்து படங்களுமே ஒரே ரகம்தான்.
இதில், சிவா மனசுல சக்தி(எஸ்எம்எஸ்), பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களே வெற்றிப் பெற்றன. பிற படங்கள் அவரது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே கொடுத்தன.
ஜீவா, ஆர்யா, ஜி.வி.பிரகாஷ், உதயநிதி ஸ்டாலின், கார்த்தி என இளம் ஸ்டார்களை இயக்கிய ராஜேஷ், முதல் முறையாக கமர்சியல் ஹீரோ சிவகார்த்திகேயனை வைத்து ’மிஸ்டர் லோக்கல்’ எனும் படத்தை இயக்கிவருகிறார். இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். வேலைக்காரன் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் காமெடிக்கு யோகிபாபு இணைந்துள்ளார். இவர் இதற்கு முன்பாக மான்கராத்தே, ரெமோ படங்களில் சிவகார்த்திகேயனுடன் நடித்திருக்கிறார். படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் டக்குனு டக்குனு பார்க்காத எனும் சிங்கிள் ட்ராக்கும் வெளியாகி, பட்டி தொட்டியெங்கும் ஒலித்து கொண்டிருக்கிறது. மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் பல முன்னணி ஹீரோக்கள் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர். எப்போதும் தன்னுடைய படங்களில் பல ஹீரோக்களை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்துவிடுவார் ராஜேஷ். சிவா மனசுல சக்தி படத்தில் ஆர்யா, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜீவா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் விஷால் ஆகியோர் கெஸ்ட் ரோல் செய்துள்ளனர். கெஸ்ட் ரோலில் நடிப்பவர்கள், ராஜேஷ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோவாக இருப்பர். இதே பாணியில் மிஸ்டர் லோக்கல் படத்திலும், ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ் என 4 பேரை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்துள்ளார். இந்தப் படமும் சிவகார்த்திகேயன்-ராஜேஷ் இருவரின் பாணியில் கலகலப்பான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.