தல அஜித் தனது திரையுலக வாழ்வை 'அமராவதி'யில் ஆரம்பித்தார். 'அமராவதி'யில் இருந்து 'உன்னைத் தேடி' வரை 'காதல் மன்னன்'னாக வலம் வந்துக்கொண்டிருந்தார்.
இப்படி காதல் மன்னன் ஆக இருந்தவரை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வாலி படத்தில் அஜித்துக்கு வசனமே கொடுக்கமால் வாயில் பபுள்காமை மட்டும் மெல்ல வைத்து வில்லத்தனத்தை வெளிப்படுத்த வைத்தார்.
இப்படி காதல் மன்னனை வில்லனாக மாற்றி, அஜித் தனது கதாபாத்திங்களில் வித்தியாசம் காட்ட பிள்ளையார் சுழியைப் போட்டனர், இயக்குநர்கள். அப்படிபட்ட ஒரு வித்தியாசமான முயற்சியாக அனாதையாக வளரும் குழந்தையின் இருண்டப் பக்கத்தை தேர்ந்தெடுத்து அமர்க்களம் மூலம் வெளிப்படுத்தினார், நடிகர் அஜித். இப்படம் அவரது சினிமா வாழ்க்கையின் ஒரு சிறந்த படம் என்றும் சொல்லாம்.
இப்படி தனக்கான கதாபாத்திரத்தை வரையறை செய்து கொண்ட அஜித், அதை தன்னுடைய சினிமா வாழ்வில் மெல்ல பரிசோதிக்கத் தொடங்கினார். பின் இடையிடையே மாஸ், க்ளாஸ் படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.
இப்படி அவர் சினிமா வாழ்க்கை போய்கொண்டிருக்கையில் ஆகஸ்ட் 31, 2011ஆம் ஆண்டு ஒரு மைல்ஸ்டோன் உருவாக ஆரம்பித்தது.
இயக்குநர் வெங்கட் பிரபு அஜித்தை நம்பி 'மங்காத்தா' ஆட ஆரம்பித்தார். இப்படம் அஜித்தின் 50ஆவது படமாகும். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் 25, 50,100ஆவது படங்கள் பெரும்பாலும் வெற்றி அடையாமல் தோல்வியோ அல்லது ஆவரேஜ் வெற்றியே பெறும் ஒரு அவல நிலை இருந்து வந்தது.
உதாரணமாக ரஜினியின் 100ஆவது படம், கமலின் 100ஆவது படம் விஜய்யின் 50ஆவது படம் அனைத்தும் தோல்வியைச் சந்தித்தது. இதில் இருந்து தப்பித்தவர் நடிகர் விஜயகாந்த். அவரின் 100ஆவது படமான கேப்டன் பிரபாகரன். சூப்பர் டூப்பர் ஹிட். இந்த ஹிட்டை துவம்சம் செய்யும் லெவலில் வெற்றி பெற்றது, அஜித்தின் 'மங்காத்தா'.
பொது தமிழ் சினிமாவில் ஹீரோ ஓப்பனிங் என்ட்ரி ஒட்டு மொத்த ரசிகர்களையும் பூர்த்தி செய்யாது.
ஆனால், இப்பட ஓப்பனிங் சீனை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடினார். யுவனின் தீம் மியூசிக், pajero காரில் இருந்து அஜித் slow motion-ல் கெத்தாக கீழே இறங்குவது என அனைத்துக் காட்சிகளையும் ரசிகர்கள் திரையரங்கில் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
இப்படத்தில் ஹீரோ என்று யாரும் கிடையாது. கதாபாத்திரங்கள் அனைத்தும் கெட்டவர்கள். அதிலும் அஜித் அநியாத்துக்கு கெட்டவர். முழு வில்லனாகவே மாறி, நடிப்பில் ருத்ரதாண்டவம் ஆடியிருப்பார். 'வாலி' அஜித் பேசமால் வில்லத்தனம் செய்திருந்தால், 'மங்காத்தா' அஜித் அதிரடி ஆக்ஷனில் வில்லதனம் செய்து மிரட்டியிருப்பார்.
'சால்ட் & பெப்பர் லுக் ஸ்டைல்', 'இந்த மே வந்தா எனக்கு 40 வயசாகுது' என்ற ஓப்பன் ஸ்டேட்மென்ட், 'இனிமே ராவமட்டும் குடிக்கக் கூடாது, சத்தியமா குடிக்கக் கூடாது' போன்ற வசனங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்தது.
நடிப்பிலும் ராய் லட்சுமியுடன் படுக்கையில் இரவைக் கழித்துவிட்டு காலையில் நீ யார்? என்று அப்பாவியாக கேட்பது, பிரேம்ஜியுடன் லூட்டி அடிப்பது, ஓடும் காரில் இருந்து காதலியின் அப்பாவைத் தள்ளிவிடுவது, மணி...மணி...மணி என்று பண வெறியில் அலைவது, சகட்டுமேனிக்கு கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது என ஸ்கிரீனில் தோன்றும் போதெல்லாம் "ஸ்ட்ரிக்ட்லி நோ ரூல்ஸ்" பின்பற்றமால் "ஒன் மேன் ஷோ" காட்டிருப்பார், தல அஜித்.
சினிமாவில் ஹீரோ என்றால் சமூக நீதிக்காக போராடுவது, அநீதிகளைக் களைவது என இருந்த ஒரு விதியை "மங்காத்தாவில்" அஜித் தூக்கியெறிந்தார். இவருக்கு இன்னொரு பலமாக இருந்தவர், நடிகர் அர்ஜூன். சின்சியர் ஆபீசர் அர்ஜூன் க்ளைமேக்ஸில், 'மை டியர் தல' என அஜித்திடம் பேசும்போது நிறைவு பெறுகிறது மங்காத்தா.
மங்காத்தா ஆடும் அஜித்துக்கு த்ரிஷா சைடிஷ் ஆக வந்து போவார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வெங்கட் பிரபு பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்துள்ளார்.
பொதுவாகவே ஒரு சினிமா வெற்றிக்கு காரணம் அந்தந்த காலத்து மக்களின் மன நிலையை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் பணம் எல்லோருக்கும் தேவையான ஒன்று. அது எப்படி வந்தாலும் ஓ.கே., என்ற மனநிலையை இதில் அழகாக காட்டி, வெற்றி பெற்றிருப்பார் இயக்குநர் 'வெங்கட் பிரபு'. அதுவும் கன்டெய்னரில் இருந்து பணத்தைக் கடத்தும் காட்சி படத்தின் அதிரடி திருப்பம்.
அஜித் பரமசிவன் நடித்து கொண்டிருக்கும் போதே முடிவு செய்துவிட்டாராம், தனது 50ஆவது படம் எப்படி இருக்க வேண்டும் என்று. வழக்கமாக, தான் அந்தப்படத்தில் நார்மலான ஹீரோவாக இருக்கமாட்டேன் என்று சொல்லி கொண்டே இருப்பார் என தல அஜித்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படி அவர் நினைத்தமாதிரியே அஜித்துக்கான 50ஆவது ஸ்கிரிப்ட்டை வெங்கட்பிரபு கொண்டு வந்துள்ளார். இப்படத்திற்கு மேலும் ஒரு பலம் யுவன் சங்கர் ராஜா இசை. பொதுவாக அஜித் படத்திற்கு யுவன் போடும் தீம் மியூசிக் சிறந்தாக இருக்கும். பில்லா தீம் இப்போதும் பலரால் விரும்பி கேட்கப்படும் ஒன்று. இதை ஈடு செய்யும் விதமாக மங்காத்தா தீம், Slow tempo-வில் ஆரம்பித்து கொல மாஸில் முடியும். அந்த பீட்டை ரசிகர்கள் என்றும் மறப்பதில்லை. 'விளையாடு மங்காத்தா, ஆம்பனி பரம்பரை, என் நண்பனே' ஆகிய பாடல்கள் படத்துக்கு ஒரு சப்போர்ட்.
அஜித் திரையில் ஒரு நடிப்பு அசுரன் என்றால், நிஜத்தில் யாருக்கும் தெரியாமல் உதவுவதில் ஒரு கொடை வள்ளல். இதனாலேயே 'தல' ரசிகர் என்றால் ஒரு தனி கெத்து வரும். இப்படி தன்னைத்தானே பொதுவாழ்விலும் நடிப்பிலும் செதுக்கிய அஜித்தை வைத்து மங்காத்தா ஆடியிருப்பார், இயக்குநர் வெங்கட்பிரபு. வெங்கட்...அடுத்து ’தல’-யை வைச்சு எப்போ "மங்கத்தா- 2" எடுக்கப்போறீங்க. அப்படி எடுத்தால் "மங்கத்தா-2" டீமுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்