நடிகர் அருண்விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஃபியா'. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபிலில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் அருண்விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர், கார்த்திக் நரேன், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது விழாவில் பேசிய நடிகை பிரியா பவானி சங்கர், ”எனது வாழ்வில் 'மாஃபியா' திரைப்படம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் இந்தப் படம் பல நல்ல மனிதர்களை என் வாழ்க்கைக்குள் கொண்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி சினிமா வாழ்விலும் அடுத்தக் கட்டத்தை நோக்கிச் செல்ல உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன். அருண் விஜய்யிடம் கண்ணியமும் விடாமுயற்சியும் இருந்தது. அவர் அதிகாலை மூன்று மணிக்கு ஜிம் போவதை தவிர்க்க வேண்டும் என்பதே எனது ஆசை” என்றார்.
அவரைத் தொடர்ந்து நடிகர் பிரசன்னா பேசுகையில், ”இந்தப் படம் எதிர்பார்க்கும் வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன். இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், ஹரி, சுந்தர்.சி போன்றவர்கள் சொன்ன தேதியில், சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துக்கொடுத்ததுதான் அவர்களின் வெற்றிக்குக் காரணம். கார்த்திக்கும் அதேபோன்றுதான் உள்ளார். தோல்வியில் இருக்கும்போது வெற்றிப்பாதைக்கு, நம்மை எப்படித் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு அருண்விஜய் தான் சிறந்த உதாரணம்” என்றார்.
பாடலாசிரியர் விவேக் பேசுகையில், ”எனக்கு நல்ல படங்களில், பாடல் எழுத வேண்டும் என்பதே ஆசை. இந்தப் படத்தில் மூன்று பாடல்களை எழுதியுள்ளேன். அருண் விஜய், பிரசன்னா இருவரில் யார் பெரியவர் என்பதை காட்டாமலேயே திரைக்கதையை இயக்குநர் கொண்டுசெல்ல வேண்டியிருந்தது. நானும் எனது பாடல்களில் அவ்வாறே கொண்டு வர முயன்றேன். இருவரின் மீதான மரியாதையை எனது பாடல் வரிகளில் காட்டியுள்ளேன்” என்று கூறினார்.