மாதுரியின் 1984ஆம் ஆண்டு வெளியான முதல் படமான 'அபோத்' மிகப்பெரிய தோல்வி. சினிமாவில் செண்டிமென்ட் அதிகம் அல்லவா? முதல் படம் மட்டுமல்ல அதற்கு அடுத்து வந்த ’ஸ்வாதி’, ’ஹிப்சட்’, ’தயவான்’, ’காட்ரோன் கி கில்லாடி’ ஆகிய படங்களும் மண்ணைக் கவ்வின. இதனையடுத்து சினிமா இன்டஸ்ட்ரியில் மாதூரி மீதான மதிப்பீட்டினைக் கேட்கவா வேண்டும்? ஆமாம், ராசி இல்லாத நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டது.
மாதுரியின் நடிப்பில் வெளியான அத்தனை படங்களும் ப்ளாப்பான நிலையில், 1988இல் வெளிவந்த ரோம்காம் ஜானர் திரைப்படமான ’தெசாப்’ திருப்புமுனையாக அமைந்தது. அதிலும், அப்படத்தில் இடம் பெற்ற ’ஏக் தோ தீன்’ பாடல் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் நுழைந்து அவருக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியது.
ஒரு நடிகனோ, நடிகையோ தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்குவதுதான் சினிமாவில் முதல் அடி. அந்தக் கூட்டமே அவர்களுக்கான இடத்தைப் பெற்றுத்தரும். அந்த வகையில் மாதுரி சினிமாவில் நுழைந்த சில வருடங்களிலேயே அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. மாதுரியின் வசீகரிக்கும் புன்னகையும், நடிப்புத் திறனும், அநாசயமான நடன அசைவுகளும் அவரை யார் என சினிமா ரசிகனை திரும்பிப்பார்க்கவைத்தது.
மாதுரி தீக்ஷித் நிகழ்த்திய சாதனைகள் அத்தனையும் இதுவரை இந்திய சினிமாவில் எவரும் தொட முடியாதது. மாதுரி தீக்ஷித் என்னும் இந்த மகத்தான நடிகை இதுவரை 14 முறை ஃப்லிம் ஃபேர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். இந்திய சினிமாவிலேயே இதுவரை எந்த ஒரு நடிகையும் 14 முறை பரிந்துரைக்கப்பட்டதில்லை. அதில், நான்கு முறை ஃப்லிம் ஃபேர் வென்று வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார் இந்த பட்டர்-ப்ரூட் ஸ்கின் பேரழகி.
எந்த ஒரு துறையிலேயும் தனக்கென ஒரு உயரத்தை வரையறுத்துவிட்டு மீண்டும் அந்த உயரத்தையும் மீறி பறப்பது என்பது சில பெண்களாலேயே முடியும். அந்த வகையில், மாதுரி தீக்ஷித் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிறுவி இன்று தனது 52ஆவது வயதில் காலடி எடுத்துவைக்கிறார். சாதனைப் பெண்மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறுவதில் ஈடிவி பாரத் மகிழ்கிறது.