தமிழ் சினிமாவில் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சிம்பு. இவர் ஒரு படம் நடிக்கிறார் என்றாலே பல சர்ச்சைகளும், கூடவே பஞ்சாயத்துகளும் வரத் தொடங்கிவிடும்.
அந்தவகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு என்ற படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், கருத்து வேறுபாடால் நடிக்க முடியாதென்று சிம்பு கூறினார். இதனையடுத்து பல பஞ்சாயத்துகள் நடந்து சுமூகமான பேச்சுவார்த்தையால் மாநாடு படப்பிடிப்பு ஆரவாரத்துடன் தொடங்கியது.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, எஸ்.ஏ.சி.சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரம்ஜி அமரன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வந்தது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் நீண்ட நாள் ஷெட்யூலில் திட்டமிட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.
இயக்குநர் வெங்கட் பிரபு ஜாலியாக படம் எடுக்கக் கூடியவர் என்ற பிம்பத்தை உடைக்க முதன் முறையாக சிம்புவுடன் இணைந்து அரசியல் படத்தை எடுத்து வந்தார்.
ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை கரோனாவால் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. இதனால், படக்குழுவினர் தமிழ்நாடு திரும்பினர். இந்நிலையில், ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழ்நாடு அரசு விதித்து வரும் நிலையில், "மாநாடு' படக்குழு மாஸ்டர் பிளானுடன் சவாலே எதிர்கொள்ள காத்திருக்கிறது.
பெரிய நட்சத்திர பட்டாளத்தை எடுக்க திட்டமிட்ட மாநாடு படம் பாதியிலேயே நின்றதால், அதனை திட்டமிட்டபடி எடுப்பதில் சிரமம் இருக்கிறது. அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் படப்பிடிப்பை பாதிக்கும் என படக்குழு தீர ஆராய்ந்துள்ளது.
இதனால், "மாநாடு" படத்திற்கு முன்பு ஒரு ஆடுபுலி ஆட்டத்தை தொடங்கவிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. தயாரிப்பாளரின் கையை கடிக்காமல், ஊரடங்கிலேயே இதே நட்சத்திர பட்டாளத்தை வைத்து பக்காவான ஸ்கிரிப்டோடு ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.
இந்தப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குநர் முதல், நடிகர்கள் எவருக்கும் சம்பளமே கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. சினிமாவில் உள்ள அனைத்து இயக்குநர்களுக்கு இருக்கும் பெரிய சவாலான ஒன்றுதான்.
ஆனால், அதற்கு பக்கபலமாக தயாரிப்பாளரும் இருப்பது தான் சுவாரசியமே. இப்படம் வெளியிடப்பட்டு கிடைக்கும் ஆதாயத்தில் அனைவருக்கும் சம்பளம் என்று பேச்சு அடிபடுகிறது. இவ்வாறு செய்வது தமிழ் சினிமாவில் புதிய மைல்கல்லாகவே பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காந்தப் பார்வை... கவர்ச்சி குயினாக மாறிய ஆத்மிகா - டிரெண்டாகும் புகைப்படம்