கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட குட்டி ரேவதி தற்போது 'சிறகு' படத்தின் மூலம் இயக்குநராகி உள்ளார். இப்படத்தில் 'கபாலி', 'வட சென்னை' ஆகிய படங்களில் நடித்த ஹரி கிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அக்ஷிதா நடிக்கிறார்.
இவர்களுடன் டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ராஜாபட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கின்றார். இப்படத்தை ஃபர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கின்றது.
இந்தப் படம் குறித்து குட்டி ரேவதி கூறுகையில், 'சிறகு' உறவுகளின் புரிதல் தேடிப் பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை. இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம். சென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரி வரை செல்கின்றது எனத் தெரிவித்தார்.
எல்லோரும் இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இயற்கையோடு இயைந்த பயணமும் இசையும் புத்துணர்வைக் கொடுக்கும் படமாக இது இருக்கும் என்று அவர் கூறினார்.