காவிரி கூக்குரல் இயக்கத்திற்கு ஆதரவு அளித்து அதற்கு ரூபாய் 42 லட்சம் நன்கொடையும் வழங்கியிருந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், கோவை ஈஷா யோகா மையத்திற்கு மாலை வந்தார். அப்போது அவர் காவிரி கூக்குரல் இயக்க களப்பணியை பார்வையிடுவதற்காகவும், அதில் ஈடுபட்டுள்ள மக்களை ஊக்குவிப்பதற்காகவும் ஈஷா நர்சரிக்குச் சென்றார்.
பின் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,'மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' திரைப்படத்தில் நடிப்பதும் , காவேரி கூக்குரல் இயக்கத்தில் பங்கேற்று இருப்பதும் எனக்கு தமிழ்நாட்டுடன் உறவினை வலுப்படுத்தி வருகின்றது. ஜெயலலிதா பல்வேறு போராட்டங்களை வாழ்வில் சந்தித்ததைப் போலவே எனது வாழ்வும் இருக்கின்றது.
சுயமாகச் சிந்தித்து செயல்பட்டு, தனது வாழ்வை அமைத்து கொண்டவர் ஜெயலலிதா. 'தலைவி' திரைப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 'தலைவி' படத்தின் முதல் பாதி ஜெயலலிதாவின் வாழ்க்கை சம்பவத்தையும்; கலை வாழ்வின் சம்பவத்தையும் கூறுவதாக இருக்கும். இரண்டாவது பாதி அரசியல் சம்மந்தப்பட்டதாக எம்.ஜி.ஆர், கலைஞருடான தொடர்புகள், அரசியல் வாழ்க்கை குறித்தும் இருக்கும்.
பன்முகத் தன்மை கொண்ட ஜெயலலிதாவை இப்படத்தில் அவரது கேரக்டரை முடிந்தளவு சிறப்பாக செய்திருக்கின்றேன். படத்தில் மட்டுமே அரசியலில் நடிப்பேன். அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றார்.
மேலும் கங்கனா, காவேரி கூக்குரலுக்கு விவசாயிகள் ஆதரவு அளிக்க வேண்டும். ஆளுக்கு ஒரு மரம் நட்டு விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும். இப்பணியை ஈஷா மையம் சிறப்பாக செய்து வருகின்றது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:
'உணவு, ஒலிம்பிக் இலக்கு' - உலகநாயகனிடம் நேரில் பகிர்ந்த பி.வி.சிந்து!