சென்னை: கோலிவுட்டில் தனது திரைப்பயணத்தை தொடங்கி பாலிவுட்டில் தற்போது கலக்கி வரும் நடிகை டாப்ஸி, ஜெயம் ரவி படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.
'கோமாளி' படத்துக்குப் பிறகு, ஜெயம் ரவியின் 25ஆவது படத்தை லக்ஷ்மண் இயக்குகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை நித்தி அகர்வால் நடிக்கிறார்.
இதைத்தொடர்ந்து தனது 26ஆவது படத்துக்கும் ஒப்பந்தமாகியுள்ளார் ஜெயம் ரவி. இந்தப் படத்தை வாமனன், மனிதன், என்றென்றும் புன்னகை படங்களை இயக்கிய அஹமத் இயக்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத ஜெயம் ரவியின் 26வது படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கவுள்ளார். இதையடுத்து முதல் முறையாக ஜெயம் ரவி - டாப்ஸி ஆகியோர் ஜோடி சேர்கின்றனர்.
தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்ஸி, பின்னர் போதிய வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு பக்கம் சென்றார். இதைத்தொடர்ந்து பாலிவுட் சினிமாவுக்கு சென்றவர் அங்கு அடுத்தடுத்து படங்களில் நடித்து முக்கிய நடிகையாக உருவெடுத்துள்ளார்.
கடந்த வாரம் அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா, நித்யா மேனன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான மிஷன் மங்கல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது ஜெயம் ரவி படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார், வெள்ளாவி தேவதை டாப்ஸி!