சென்னை: 'இந்தியன் 2' படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்ட விவகாரத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரிகளிடம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த மாதம் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பான வழக்கை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்தப் படத்தின் இயக்குநர் ஷங்கர், கதாநாயகனாக நடிக்கும் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பிய நிலையில், அவர்கள் இருவரும் நேரில் ஆஜராகினர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ள படத்தைத் தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன் நிறுவனத்துக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்திலிருந்து வந்த அதிகாரிகள் 2 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அழைத்து இன்று விசாரணை நடத்தினர்.
அப்போது, விபத்து ஏற்பட்ட காரணங்கள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன் என்பது குறித்தும் அவர்களிடம் விசாரிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படப்பிடிப்புத் தளத்தில் அதிகமான ஆட்களைப் பணியில் ஈடுபடுத்தியதாகவும், ஆனால் குறைந்த நபர்களை மட்டுமே காட்டி அவர்கள் காப்பீடு உரிமைக்கோரியதாகவும் இந்த நிறுவனம் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாகவும் லைகா நிறுவன அதிகாரிகளிடம் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது 'இந்தியன் 2' படத்தின் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அடுத்ததாக ஈவிபி படப்பிடிப்புத்தள உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகளிடமும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தவுள்ளனராம்.
சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட் செட் அமைக்கப்பட்டு 'இந்தியன் 2' படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது படப்பிடிப்புத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயரிழந்ததுடன், 12 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.