நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான 'சிவப்பு மஞ்சள் பச்சை' மற்றும் 100% காதல் படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
இந்நிலையில் ஹாலிவுட்டில் தயாராகி வரும் 'ட்ராப் சிட்டி' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இயக்குநர் ரிச்சார்ட் பர்செல் இயக்கும் இத்திரைப்படத்தின் டீஸர் கடந்த 11ஆம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் முறையாக ஹாலிவுட்டில் ஜி.வி.பிரகாஷ் இப்படம் மூலம் கால்பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் ரிச்சார்ட் பர்செல் கூறுகையில், "பழைய கதை சொல்லல் முறை மற்றும் ஹிப் ஹாப் இசையின் இயக்கவியல் ஆகியவற்றின் கலவையான திரைப்படம் ட்ராப் சிட்டி. திருட்டு, ராப் இசை, காவல் துறையின் வன்முறை, வைரலாகும் பிரபலங்கள் ஆகியவற்றின் கருப்பொருளை உள்ளடக்கியுள்ளதாக இப்படம் உருவாகிறது.

கஷ்டப்படும் ராப் பாடகர் ஜாக்ஸ்ன் என்பவர், போதைப் பொருள் கடத்தல் தலைவனிடம் பணியாளாக வேலை செய்கிறார். இதற்கிடையில் ராப் பாடகர் ஜாக்ஸன் உருவாக்கும் ஒரு பாடல், அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு மாபெரும் வைரலாகிறது.
அவரது குற்றம் காரணமாக அவரது இசை புகழ் தீவிரமடைகிறது என்றாலும், ஒரு அபாயகரமான துப்பாக்கிச் சூடு அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய தேர்வை எதிர்கொள்ளத் தூண்டுகிறது. இதை அவர் எப்படிச் சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதை ஆகும்" என்று கூறியுள்ளார்.
இந்தப்படத்தில் நெப்போலியன், எரிகா பிக்கெட், க்ளிஃப்டன் பாவெல், யுஹான் ஜோன்ஸ், டெனிஸ் எல்.ஏ.வொயிட் மற்றும் டாரினா படேல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.