இசை என்பது உலகின் பொதுமொழி. அதை உருவாக்குபவர்கள் பொதுவானவர்கள். தமிழ் இசையுலகு ஞானி, புயல், தென்றல், வசந்தம் என எண்ணற்ற இசையமைப்பாளர்களை கொண்டுள்ளது. இந்த இளைஞர் தமிழ் இசைக்கு அறிமுகமானபோது ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் என்ற அடைமொழியோடு அறிமுகமானார். அப்போது இவர் மீது இருந்த ஒரே வெளிச்சம் ரஹ்மான் உறவுக்காரப்பையன். ஆனால் அதற்கு பிறகு அவர் நிகழ்த்திய பாய்ச்சலை தமிழ் இசை மறக்காது.
வெயில் திரைப்படத்தில், 'வெயிலோடு விளையாடி' பாடல் பட்டித் தொட்டியெங்கும் ஹிட் அடிக்க தென் மாவட்டங்களின் தேசிய கீதமானது. அதில் மனிதம் போற்றும் கவிஞன் நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் உயிர் செலுத்த ஜி.வி பிரகாஷின் மெட்டு உணர்வை கொடுத்தது. அந்தத் திரைப்படத்தில் மற்றொரு பாடல் கவனிக்கப்பட்டாலும் கொண்டாடாமல் விட்டு வைத்திருக்கிறோம். ’இறைவனை உணர்கிற தருணம் இது’ பாடலை தற்போது கேட்டாலும் இறைவனை உணரலாம். அவ்வளவு மென்மையான பாடல் அது. அதன் பிறகு ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகன் என்ற அடையாளம் மாறி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் என்ற புது அடையாளம் ஒட்டிக்கொண்டது. ஜி.வி. எப்போதும் தனித்துவமானவர். ஏ.ஆர். ரஹ்மானின் இசை ஒரு ஸ்லோ பாய்சன் போக போக நமது உயிரை உருக்கும் என்ற பேச்சு எப்போதும் உண்டு. இவரது இசை ஸ்லோ பாய்சன் வெர்ஷன் 2.
முக்கியமாக 'பொல்லதாவன்' திரைப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் வேறு தளத்திற்கு அவரை அழைத்துச் சென்றது. 'வடசென்னை' குறித்த காட்சியமைப்புகளில் ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை இன்றுவரை ட்ரெண்ட் செட்டர். இன்னும் ஆயிரம் 'வடசென்னை' படங்கள் வந்தாலும், எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் அந்த பின்னணி இசை கொடுக்கும் உற்சாகத்தை எவராலும் கொடுக்க முடியுமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.
அப்படி கொடுக்க முடிந்த ஜி.வி. பிரகாஷால், 'மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்' பாடலில் மனம் சில்லென மாறும் உணர்வை நம்முள் செலுத்த முடியும். அந்தப் பாடலை கேட்டால், 'புது வெள்ளை மழை இங்கே பொழிகின்றதே' பாடலை கேட்கும்போது எப்படி நாம் குளிர் பிரதேசத்திற்குள் செல்வோமோ அதேபோல் இந்த பாடல் மூலமும் குளிர் காலத்திற்குள் ஜி.வி. நம்மை அழைத்துச் செல்வார்.
இது இப்படி என்றால், 'பொல்லாதவன்' திரைப்படத்தில் காதல் காட்சிக்காக அவர் இசையமைத்த பின்னணி இசை பல வருடங்கள், ஒரு தலை காதலர்களின் ரிங் டோனாக நிலைத்தது. இன்னும் சிலர் அந்த இசையை கொண்டாடி தீர்க்கிறார்கள்.
இப்படி மென்மையாகவே போய்க்கொண்டிருந்த ஜி.வி. 'இசைப்புயல்' ஒன்றை செலுத்தினார். ஆடுகளம் திரைப்படத்தில் 'ஒத்த சொல்லால' பாடலை கேட்டு, மால்களில் படம் பார்த்த ஏ செண்டர் ரசிகர்கள் கூட குத்தாட்டம் போட்டிருப்பார்கள். அதே படத்தில் இடம்பெற்ற 'என் வெண்ணிலவே' பாடலை கேட்டு சி செண்டரில் படம் பார்த்த ரசிகர்கள் அமைதியாகி உருகி இருப்பார்கள்.
அந்த வகையில் ஜி.வி. பிரகாஷ் பெரும் வித்தைக்காரன். பொதுவாக பி, சி செண்டர்களில் ராப் இசை என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. யோகி பி போன்றோர்கள் வந்து அதை அறிமுகப்படுத்தினாலும் ரசிகர்களுடன் ஒட்டவில்லை. ஆனால் ஜி.வி பிரகாஷ், “வாழ்க்கை ஒரு போர்க்களம்” பாடலை முன்வைத்த போதுதான் ரசிகர்களுடன் ராப் பாடல்கள் ஒட்டிக்கொண்டன.
ஜி.வி. பிரகாஷின் திரை வாழ்க்கையில் இயக்குநர் ஏ.எல். விஜய் மிக மிக முக்கியமானவர். கிரீடம் திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் அடிக்க, 'மதராசப்பட்டினம்' திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ப்ளே லிஸ்டில் சேர்ந்து கொண்டன.
குறிப்பாக, 'பூக்கள் பூக்கும் தருணம்', 'ஆருயிரே ஆருயிரே' பாடல் அப்போது அல்ல இப்போது காதலிப்பவர்களையும் உருகி மருக செய்யும். குறிப்பாக, “நான் எழுதிய பாடல்களிலேயே எனக்கு மிகவும் நெருக்கமான பாடல் ஆருயிரே பாடல்தான்” என நா.முத்துக்குமார் எங்கோ சொல்ல கேட்டதுண்டு. மதராசப்பட்டினத்தில் அவர் இசையமைத்த, ”Feel of Love” கேட்டால் கொளுத்தும் வெயிலிலும் சிறு துளி மழையை நம்மில் விழவைக்கும் பலம் கொண்டது.
எல்லோரும் 'ஆனந்த யாழை மீட்டுகிறாள்' பாடலை கொண்டாடி தீர்த்துவிட்டோம். அது நல்ல பாடல்தான் அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், தெய்வத்திருமகளில், “ஆரிரோ ஆராரிரோ” பாடலில் ஜி.வி. அமைத்தது இசை இல்லை; வாழ்க்கை. ஆனந்த யாழை கொண்டாடியது போல் அதை கொண்டாட தவறிவிட்டோமோ என்று தோன்றுகிறது.
நடிகர் விக்ரமும், பேபி சாராவும் க்ளைமேக்ஸில் வசனமே இல்லாமல் உரையாடிக் கொண்டிருப்பார்கள். ஜி.வி. அந்த காட்சிக்கு பின்னணி இசையமைத்தார் என்று அனைவரும் கூறுவார்கள். உண்மையில் சொல்லப்போனால் வசனமே இல்லாத காட்சியில், ஜி.வி. பிரகாஷ் இசை வசனம் எழுதியிருப்பார். அத்திரைப்படத்தில் ஜி.வி. ஒரு வசனகர்த்தா என்றுதான் கூற வேண்டும்.
தாண்டவம் திரைப்படத்தில் அவரது பின்னணி இசையாகட்டும், 'ஒரு பாதி கதவு நீயடி', 'உயிரின் உயிரே' பாடல்களாகட்டும் அனைத்தும் அமைதியை தூவிச் செல்லும். ஒரு இசைக்கு முக்கியமே இரைச்சலை கொன்று ரசிகனுக்கு அமைதியை விதைக்க வேண்டும். அப்படி பார்த்தால் அவரது பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் அமைதியை கொடுக்கக்கூடியது. அவருக்கு எப்போதோ தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும்; ஆனால் கிடைக்கவில்லை. விருதுகளுக்கு ஆசைப்படுபவர் அவர் கிடையாது. "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற நோக்கத்தில் அவர் பயணப்படுபவர்.
செல்வராகவன் என்றாலே யுவன் ஷங்கர்தான் என்ற கூற்று ரசிகர்களின் சிந்தனையில் அனிச்சையாக தோன்றும். ஆனால், 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்பட போஸ்டரில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் என்ற பெயரை பார்த்ததும், செல்வராகவன் படத்தில் யுவன் இடத்தில் ஜி.வியா என அனைவரும் தலையை சொறிந்தனர். ஆனால் படம் வெளியான பிறகு தலையை சொறிந்த அனைவரும் ஜி.வி.யை தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடினர். சோழர்களை தேடிப்போகும் காட்சிகளில் நடராஜர் சிலையின் நிழலில் அனைவரும் ஓடும்போது, “ஓம் ஓம் சிவாய நமஹ” என்ற பின்னணி இசையை அவர் அமைத்தபோது அனைவரின் நாடிகளும் அந்த நிமிடங்களில் துள்ளிக் குதித்தன. சிவன் திரையரங்கில் இருந்திருந்தால் எழுந்து நின்று கை தட்டியிருப்பார்.
குறிப்பாக பார்த்திபன் அறிமுக காட்சியில் அவர் இசையமைத்த "The King Arrives"இல் நான் இசையுலகின் இளவரசன் என தன்னை கோலிவுட்டுக்கு கர்வத்துடன் பிரகடனப்படுத்திக்கொண்டார். கார்த்தியும் பார்த்திபனும் சேர்ந்து நடனமாடும் ”Celebration of Life”இல் எவ்வளவு துன்பம் வந்தாலும் வாழ்க்கையை கொண்டாடுங்கள் அப்படி இல்லையா என் இசையை கேளுங்கள் என தன்னை ஒரு மீட்பனாக பிரகடனப்படுத்திக் கொண்டார். இப்படி அந்த திரைப்படத்தில் அடித்து ஆடிய ஜி.வி., ”தாய் தின்ற மண்ணே” பாடலில் அவரும் கலங்கி அனைவரையும் கலங்க வைத்திருப்பார்.
செல்வா-ஜி.வி. என்ற கூட்டணி உருவான பின்பு உருவானது ‘மயக்கம் என்ன’. அந்த திரைப்படம் செல்வா, தனுஷ், ரசிகர்கள் என அனைவரும் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய திரைப்படம். அத்திரைப்படத்தின் மொத்த ஜீவனையும், இடைவேளை காட்சியில், ஜி.வி. பிரகாஷ் ஒட்டுமொத்தமாக கரைத்து வைத்திருப்பார். அந்த இசை ஒரு குற்ற உணர்ச்சியைத் தரும், கொண்டாட்டத்தைத் தரும், குழப்பத்தைத் தரும், கருணையைத் தரும். ஜி.வி. பிரகாஷ் தனது விரல்களில் உணர்வுகளை உருவாக்கக் கூடியவர்.
இயக்குநர் பாலா எப்போதும் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர். இளையராஜாவையும், யுவன் ஷங்கர் ராஜாவையும் தேடிப்போன பாலாவின் கால்கள் வேறு யாரையும் தேடிப் போகாதா என்று ஊடகங்கள் எழுத அவரது கால்கள் பயணப்பட்டது ஜி.வி.பிரகாஷை நோக்கி. இது சாதாரண விஷயமில்லை. ஏனெனில் பரதேசி கதைக்களம் மிகவும் அடர்த்தியானது, அத்திரைப்படத்திற்கு இசையை கொடுக்கக் கூடாது; உணர்வைத்தான் கொடுக்க வேண்டும். அதில் ஜி.வி. இசையை அல்ல; உணர்வைக் கொடுத்திருப்பார். திரைப்படத்தின் க்ளைமேக்ஸில் ஜி.வி. பிரகாஷின் பின்னணி உணர்வு உணர்ச்சியை தூண்டக் கூடியது.
கானா பாடலுக்கு பெயர்போன தேவாவின் குரலை இந்த தமிழ் சினிமா மறந்துவிட்டதோ என அனைவரும் யோசித்துக்கொண்டிருந்த சூழலில் 'தெறி' திரைப்படத்தில் தேவாவை மீண்டும் கொண்டுவந்தார் ஜி.வி. பிரகாஷ். ராஜா ராணி திரைப்படத்தில் கானா பாலாவை உபயோகப்படுத்தியதாகட்டும், 'தெறி' படத்தில் விஜய்யை பயன்படுத்தியதாகட்டும் அவரது குரல் தேர்வு எப்போதும் தனித்தன்மையுடன் கூடியது.
அவரின் பலமே அவரது குரலும், முகமும். அவரது குரலில் எப்போதும் ஒரு சாந்தம் இருக்கும்; முகத்தில் ஒரு பேரமைதியும் பேரன்பும் இருக்கும். அதுதான் அவரது இசையில் வெளிப்படுகிறது. சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர். இசை என்பது மக்களுக்கு துணை நிற்க வேண்டுமென்றால் இசையமைப்பாளன் மட்டும் ஏன் மக்களின் பிரச்னைக்கு துணை நிற்கக் கூடாது. அதை உடைத்து பொதுவெளிக்கு வந்தவர் அவர்.
ஜி.வி. ஒரு ஹீரோவே கிடையாது என பலர் அவர் மீது விமர்சனம் வைப்பதுண்டு. ஆனால் அவர்களிடம் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் என்று சொன்னால் சில நொடிகள் அமைதி காப்பர். ஏனெனில் அவர் கொடுத்த பாடல்கள் அப்படி. அனைத்திலும், ஒரு குளிர், வெயில், ஏக்கம், மகிழ்ச்சி, ஆச்சரியம், இயலாமை என அனைத்தையும் கொடுத்தவர்.
இந்தியாவின் தலைசிறந்த இயக்குநராக கருதப்படும் அனுராக் காஷ்யப் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை பார்த்துவிட்டு 'கேங்ஸ் ஆஃப் வாஸிபூர்' திரைப்படத்தின் இரண்டு பாகங்களுக்கும் பின்னணி இசை அமைக்க வாருங்கள் என அழைத்தார். வேற்று மொழி இயக்குநர்கள் தமிழ் இசையமைப்பாளர்களை அழைத்தது என்றால், இளையராஜா, ரஹ்மான்.
அந்த வரிசையில் ஜி.வி பிரகாஷும் இருக்கிறார். அவரை கொண்டாடித் தீர்க்க வேண்டும். அவர் இசையமைத்த சிறப்பான பாடல்கள் குறித்து பேசவேண்டுமென்றால் அவர் தினம் தினம் பிறந்த தினம் கொண்டாட வேண்டும். அவரால் தினம் தினம் பிறக்க முடியாது. ஆனால், அவரது இசையால் ரசிகர்கள் தினம் தினம் புதிதாக பிறக்கலாம். ஏனெனில் அவரது இசையில் பல தளங்கள் இருக்கும்.
’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படத்தில், ’பெண் மேகம் போலவே நீ என் மேல் ஊர்கிறாய்’ என்ற பாடலை ஜி.வி. பிரகாஷும் அவரது மனைவி சைந்தவியும் இணைந்து பாடியிருப்பார்கள். அதில் நா. முத்துக்குமார் இப்படி ஒரு வரி எழுதியிருப்பார், “இசையாலே காதல் ஜீவியாகும் சைந்தவியே”. ஆம், இசையாலே காதல் ஜீவித்திருப்பது உங்களாலும்தான். இசையின் ஜீவனை மீட்க மீண்டும் வாருங்கள் ஜி.வி. பிறந்த நாள் வாழ்த்துகள்!