தோனி திரைப்படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த மாதம் 14ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் மறைவு திரைத் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், யாரோ அவரை கொலை செய்து விட்டார்கள் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
அதேபோல், சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ள மாட்டார் என்றும், இது திட்டமிடப்பட்ட கொலை என்றும் சுஷாந்த் சிங்கின் தந்தையின் பெயரில் தெரிவிக்கப்பட்ட பதிவு ஒன்று ட்விட்டரில் சமீபத்தில் கவனம் ஈர்த்து வந்தது. இவ்வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டுமென்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அந்த ட்விட்டர் கணக்கு சுஷாந்த் சிங்கின் தந்தை உடையது அல்ல என்று சுஷாந்தின் குடும்பத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர். மேலும் ஜூன் 27ஆம் தேதிக்குப் பிறகு சுஷாந்த் சிங்கின் தந்தை எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.