தமிழில் முதல்முறையாக டைம் லூப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், 'ஜாங்கோ'. மனோ கார்த்திக் எழுதி, இயக்கிய இந்தப் படத்தை திருக்குமரன் தயாரித்துள்ளார்.
அறிமுக நடிகர் சதீஷ் குமார், மிருணாளின் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கருணாகரன், ரமேஷ் திலக், அனிதா சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான ஜாங்கோ படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் இன்று (நவ.19) திரையரங்குகளில் வெளியானது.
இதையடுத்து ஜாங்கோ படம் குறித்து இயக்குநர் மனோ கார்த்திக் கூறுகையில், " இப்படம் முழுக்க முழுக்க தொடர்ந்து வித்தியாசமான கதைகளுக்கு ஆதரவு அளித்து வரும் தமிழ் சினிமா ரசிகர்களை நம்பி எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் டைம் லூப் சைன்ஸ் பிக்சன் த்ரில்லர் படமாக வெளியாகும் "ஜாங்கோ" ரசிகர்களுக்கு வித்யாசமான அனுபவத்தை தரும்.
எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சி.வி. குமார், படத்தில் பணியாற்றிய அத்துனை கலைஞர்களுக்கும், தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், என்னை பெற்றெடுத்த தாய், தந்தைக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படம் சவுண்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகளில் வந்து பார்த்தால் மட்டுமே அதை முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதால் உங்கள் அனைவரையும் தியேட்டரில் வந்து கண்டுக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.