கரோனா தொற்று அச்சம் காரணமாக 2019ஆம் ஆண்டுக்கான 67ஆவது தேசிய விருதுகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இன்று (மார்ச் 22) மாலை டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்திலிருந்து அறிவித்தது. இதில் சிறந்த தமிழ்ப் படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் விருது வென்றுள்ளது. மேலும் சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.
அதேபோல் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' திரைப்படம் சிறப்பு விருதை வென்றது. இதே படத்திற்காகச் சிறந்த ஒலிப்பதிவாளருக்கான விருதை ரசூல் பூக்குட்டி வென்றுள்ளார். மேலும் சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்) வென்றார். 'விஸ்வாசம்' படத்திற்காக டி. இமானுக்குச் சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியினர், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர். அதேபோல், விஜய் சேதுபதி, டி. இமான், பார்த்திபன், ரசூல் பூக்குட்டி உள்ளிட்டோருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.
வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணிக்கு இது இரண்டாவது தேசிய விருது ஆகும். ஏற்கனவே 2011ஆம் ஆண்டு வெளியான 'ஆடுகளம்' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் உள்பட ஆறு விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.