முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்கிற பெயரில் படமாக தயாராகி வருகிறது. முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் இந்த படத்தில், நடிகர் ஜெ.எம்.பஷீர் முத்துராமலிங்கதேவராக நடிக்கிறார்.
ஊமை விழிகள் படத்தின் இயக்குநர் அரவிந்த்ராஜ் இயக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இன்று சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் தேசிய தலைவர் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில், படத்தின் நடிகர் ஜெ.எம்.பஷீர், எஸ்.எஸ்.ஆர். கண்ணன், படத்தின் இயக்குநர் அரவிந்த்ராஜ் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் அரவிந்த்ராஜ், தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தி பேசினார். அதில், ''இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ஜெ.எம் பஷீருக்கு விக் வைத்து நெற்றியில் பட்டை அடித்து குங்குமப்பொட்டு வைத்தோம். அப்படியே முத்துராமலிங்கத் தேவரை பார்ப்பதுபோல் இருந்தது. அந்த அளவிற்கு அவருக்கு அந்த கதாபாத்திரம் பொருத்தமாக அமைந்திருந்தது.
இந்தப்படம் ஒரு வரலாற்றுப் படம் என்பதால் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மிகவும் சவாலாக இருந்தது. குறிப்பாக நேருவும் காந்தியும் நடிக்கும் நடிகர்களை தேர்வு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். அந்த அளவிற்கு மிகவும் பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்துள்ளோம். இது மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது இந்த படத்தின் 60 சதவீத வெற்றியை உறுதி செய்துள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: இயக்குநர் சுசீந்திரனுடன் கைகோர்த்த சிம்பு!