தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாச முயற்சி செய்து படத்தை இயக்குபவர் பார்த்திபன். அதன் ஒரு முயற்சியாக தற்போது பார்த்திபன், எழுதி இயக்கி தயாரித்து, படம் முழுவதும் தனி ஆளாக நடித்திருக்கும் படம் 'ஒத்த செருப்பு'.
இப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே முழுபடத்திலும் வரும்படி உருவாகி உள்ளது. ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி ஒலிக்கலவை செய்துள்ள இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியானது.
இப்படம் பற்றி தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறுகையில், ”ஒத்த செருப்பு ஒரு கதாபாத்திரம் நடித்துள்ள படம். ஒரு கமர்ஷியல் படம் இரண்டரை மணி நேரம் எவ்வளவு சுவாரஸ்யமாக கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு இந்தப்படத்தை பொழுதுபோக்காக கொடுத்துள்ளார் பார்த்திபன்.
இந்தப்படத்தில் பார்த்திபனின் நடிப்பு, இயக்கம், திரைக்கதை மட்டுமல்ல இந்த கதையை நகர்த்திக்கொண்டு போன விதம் ரொம்ப சேலஞ்ச்.
பொதுவாக நடிகர் பார்த்திபன் திருமணத்திற்கு ஒரு அன்பளிப்பு கொடுக்க வேண்டும் என்றால் ஆறு மணி நேரம் யோசிப்பவர் இரண்டரை மணி நேரத்திற்கு எவ்வளவு நேரம் யோசித்து இருப்பார். இப்படத்தில் அவருடைய உழைப்பு தெரியும்.
பார்த்திபனின் உழைப்பு ஒவ்வொரு ஃபிரேமிலும் நன்றாக தெரிகிறது.தமிழ் சினிமாவை நேசிப்பவர்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய படம் இது.
இந்த ஆண்டு விருது பெறுவதற்கு என்று யாராவது படம் எடுத்திருந்தால் சற்று நிறுத்தி வையுங்கள். ஒத்த செருப்பு படத்தோடு போட்டி போடுவது மிகவும் கஷ்டம். அந்த அளவுக்கு படம் அற்புதமாக உள்ளது.
ஒரு தனி மனிதனே தயாரிப்பு, இயக்கம், ஸ்கிரீன்பிளே, நடிப்பு என பார்க்கும்பொழுது விருது குழுவினருக்கு இந்த படம்தான் முதலில் தெரியும். ஒத்த செருப்பு அனைத்து விருதுகளையும் குவிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.