புளூவேல் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த், ஜாக்குவார் தங்கம், ஆர்.வி. உதயகுமார், கே. ராஜன் இயக்குநர் பேரரசு, நடிகை பூர்ணா, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மனநல மருத்துவர் ஃபஜிலா ஆசாத் இசை தகட்டை வெளியிட, புளூவேல் விளையாட்டினால் உயிரிழந்த விக்னேஷின் தாயார் டெய்சி ராணி பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் ஆர்.வி உதயகுமார் பேசுகையில், ’தமிழ் சினிமாவில் 90 சதவிகித படங்கள் தோல்வியடைகின்றன. அதற்கு காரணம் கதையில்லை, திறமையான இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன் வந்துள்ளது நன்றி கூறத்தக்கது.
ஆன்லைனில் மட்டும்தான் சினிமா டிக்கெட் விற்கப்படும் என்ற திட்டத்தால் அரசாங்கத்திற்குதான் வருவாய் அதிகம். தயாரிப்பாளருக்கோ 25 சதவீதம்தான் வருமானம். அதை வைத்துக்கொண்டு இது மாதிரி தரமான படங்களை எப்படி தயாரிக்க முடியும்.
ஆகவே, இத்திட்டத்தை மறுபரீசிலனை செய்ய வேண்டும். தயாரிப்பாளர்கள் ஒன்றுகூடினால்தான் இத்திட்டத்தை மாற்றியமைக்க முடியும்’ என்றார்.
இதனையடுத்து, இயக்குநர் பேரரசு பேசுகையில், ”செல்போன் உபயோகிக்காதவர்கள் இன்று கிடையாது என்றே சொல்லலாம். இளைஞர்கள் முதல் பூ விற்பனை செய்பவர்கள்கூட செல்போன் உபயோகிக்கிறார்கள். கணவன் கதவைத் திறப்பதற்குக் கூட காலிங் பெல்லை அழுத்துவதில்லை. செல்போனில்தான் கதவைத் திறக்க சொல்கிறார்.
அதற்கு காரணம் குறைந்த கட்டணம் செலுத்தி ஒரு மாதம் முழுக்க எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் என்ற திட்டம்தான். முன்பு இருந்தது போல் கட்டண சேவையை அமல்படுத்த வேண்டும். ஒரு நிமிடத்திற்கு ரூ.10 என்று நிர்ணயித்தால்கூட தவறில்லை. அப்போதுதான் கட்டுப்பாடு வரும். ஃபுல் டாக் டைம் என்ற அரக்கனை ஒழிக்க வேண்டும்.
சில படங்களை பொறுப்பில்லாமல் எடுப்பார்கள், சில படங்களை பொறுப்புடன் எடுப்பார்கள், ஆனால் சில படங்களைத்தான் விழிப்புணர்வுக்காக எடுப்பார்கள். புளூவேல் அப்படி ஒரு படம். கணேஷின் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது’ என்றார்.
தயாரிப்பாளர் அருமை சந்திரன் பேசுகையில், ’புளூவேல் விளையாட்டு இன்று இல்லை, ஆனால் அதுபோன்று மோமோ, பப்ஜி போன்ற ஆபத்தான விளையாட்டுகளை யாரும் விளையாடக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் இப்படத்தை எடுத்திருக்கிறோம்.
இப்படத்தின் டீஸரை தமிழ்நாட்டில் உள்ள பல பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு காட்சிப்படுத்தினோம். இதுவரை சுமார் 10,000 மாணவர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம்.
இதுபோன்ற விளையாட்டை எத்தனை பேர் விளையாடுகிறார்கள் என்று மாணவர்களிடம் கேட்கும்போது அவர்களில் அதிகப்பேர் விளையாடுவதாகக் கூறினார்கள். அந்த விளையாட்டை எதனால் விளையாடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, தனியாக இருக்கிறோம், பொழுதுபோக்கிற்காக விளையாடுகிறோம் என்று கூறுகின்றனர்.
அதில் ஒரு சிறுவன், என் சகோதரன் எனது பெற்றோருக்குத் தெரியாமல் புளூவேல் விளையாடுகிறான் அதிலிருந்து காப்பாற்ற ஏதாவது வழிகளை இப்படத்தில் கூறியிருக்கிறார்களா? என்று கேட்டான். அடுத்த சில நிமிடங்களில் அந்த மணவனை சந்தித்து அந்த விளையாட்டில் இருந்து மீட்டோம்’ என்றார்.