ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 'எட்டு தோட்டாக்கள்' படத்தின் இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கும் படம் 'குருதி ஆட்டம்'. இப்படத்தில் அதர்வா, பிரியா பவாணி சங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
வழக்கமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கதாநாயகன் மட்டுமே இடம் பிடிப்பார். ஆனால் 'குருதி ஆட்டம்' ஃபர்ஸ்ட் லுக்கில் அதர்வா, குழந்தை நட்சத்திரம் திவ்யதர்ஷினியை முதுகில் சுமந்து நிற்பது போன்று வெளியாகியது.
இது குறித்து ஸ்ரீகணேஷ் கூறுகையில், ரசிகர்களுக்கு கதையின் கரு இரண்டு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டது என்பதை உணர்த்துவதற்காகவே இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
'குருதி ஆட்டம்' படத்தில் ஒரு விபத்திற்கு பிறகு நாயகனுக்கும், ஒரு பெண் குழந்தைக்கும் ஏற்படும் உறவு, பயணம் என அவர்களை சுற்றியே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன், திரில்லர், செண்டிமெண்ட் ஆகியவை இந்தப் படத்தில் இருக்கும்.
இம்மாத இறுதியில் மதுரையில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்தவுள்ளோம். பர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மொத்த படக்குழுவிற்கும் பெரும் புத்துணர்ச்சி தந்துள்ளது என்றார்.