போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'வலிமை'. கரோனா தொற்று அச்சம் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இப்படம் குறித்து நீண்ட நாள்களாக எந்தவித அப்டேட்டும் வராத காரணத்தால் அஜித் ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் யாரைப் பார்த்தாலும் 'வலிமை' அப்டேட் கேட்டு வந்தனர்.
டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து, தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, சென்னை மைதானத்தில் வைத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, சென்னை வந்த பிரதமர் மோடி என பல தரப்பினரிடம் ரசிகர்கள் வலிமை அப்பேட் கேட்க அந்தக் காணொலியும் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி வெளியாகும் என போனிகபூர் அறிவித்திருந்தார். 'வலிமை' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை ஐரோப்பாவில் எடுக்க இயக்குனர் வினோத் திட்டமிட்டிருந்தார். இதற்காக படக்குழுவினர் ஐரோப்பா செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் கரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு மற்ற நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
ஐரோப்பாவிலும் இதே நிலை நீடிப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் படக்குழுவினர் திகைத்து வருகின்றனர்.இதனால் வலிமை படம் ஆகஸ்ட் மாதம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.