நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'காக்கா முட்டை' படத்தில் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் அனைவராலும் பாராட்டப்பட்டவர். அதையடுத்து தர்மதுரை, வடசென்னை, சாமி ஸ்கொயர், செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து 'துருவ நட்சத்திரம்', 'இடம் பொருள் ஏவல்', 'SK 16' என அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் காதலில் விழுந்துவிட்டார் என்றும் விரைவில் இவருக்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்தத் தகவலை மறுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், "என் காதல் கதை குறித்து ஒரு வதந்தியைக் கேள்விப்பட்டேன். யார் அந்த நபர் என்று தெரிந்துகொள்ள நானும் உங்களைப் போன்று ஆவலாக காத்திருக்கிறேன். இதுபோன்ற பொய்யான செய்தியை பரப்புவதை நிறுத்துங்கள். அப்படி ஒரு செய்தி இருந்திருந்தால் உங்கள் அனைவருக்கும் முதல் ஆளாக நானே அறிவிப்பேன். நான் சிங்கிளாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.