சென்னை: வடபழனியிலுள்ள தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துடனான ஃபெப்சி அமைப்பின் 23 சங்கங்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நேற்று (ஜனவரி 7) சுமுகமாக முடிவுற்றது. பேச்சுவார்த்தை ஆறு மாதங்கள் நடைபெற்றது. ஏழு ஆண்டுகளாக ஊதியம் உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் மூலம் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 40 முதல் 50 விழுக்காடு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு தை மாதம் முதல் நடைமுறைக்கு வரும். முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும். படப்பிடிப்பில் ஃபெப்சி தொழிலாளர்கள் கண்டிப்பான முறையில் கரோனா விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
சின்னத்திரை படப்பிடிப்பில் அலட்சியமாகச் செயல்படுகின்றனர். சமையல், ஒப்பனை, உடையலங்கார கலைஞர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
விதிகளை மீறுவோர் மீது சம்மேளனம் நேரடியாக நடவடிக்கை எடுக்கும். ஒருசிலர் தவறு செய்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, பல்லாயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். இரவு 10 மணிக்குள் ஊழியர்கள் வீடு சென்று சேரும்விதமாகப் படப்பிடிப்பு நடைபெறும். பொழுதுபோக்கைவிட உயிர் பாதுகாப்பு முக்கியம்.
டிசம்பர் முதல் திரைப்படத் தொழில் சீரடைந்துவந்தது. வலிமை, ஆர்.ஆர்.ஆர். திரையரங்கில் வெளியிடப்பட்டிருந்தால் மேலும் சீராகி இருக்கும். தற்போதைய ஊரடங்கால் திரையரங்கில் தர்மத்துக்குப் படம் ஓட்டும் நிலைதான் இருக்கிறது. ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்பட்டால்தான் திரையரங்கிற்குக் கூட்டம் வரும்.
மத்திய, மாநில அரசுகள் கரோனா காலத்தில் தொழிற்சாலைகளுக்குச் செய்யும் உதவிகளைத் திரைப்படத் துறைக்கும் செய்ய வேண்டும். தயாரிப்பாளர்களிடம், படப்பிடிப்பு நடைபெறாத ஞாயிற்றுக்கிழமைகளில் ஊதியம் கேட்க மாட்டோம்.
பெரிய நடிகர்களிடம் மீண்டும் மீண்டும் சம்மேளன ஊழியர்களுக்காக நிதியுதவி கேட்பதற்குத் தர்ம சங்கடமாக இருக்கிறது. நிதியுதவி கேட்டுக் கொண்டே இருக்க முடியாது. அதனால் அவர்களுக்கும் சிரமம் ஏற்படும். மீண்டும் முன்புபோல கரோனாவால் திரைப்படத் தொழில் பாதிக்கப்பட்டால் அதை எதிர்கொள்வது சவாலாக இருக்கும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 5 மொழிகளில் ஓடிடியில் வெளியான புஷ்பா