மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், பாலிவுட் திரைப்பட உலகில் சுஷாந்த் திறமையான நடிகராகத் திகழ்ந்தார் என்றும், தனது முழு திறமையையும் உணரும் முன்பாகவே அவர் இறந்துவிட்டார் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நடிகை ரியா சக்ரபோர்த்தி கோரியதுபோல் சிபிஐ (மத்திய புலனாய்வு குழு) விசாரணை அவருக்கு உரிய நீதி கிடைக்க உதவும் என்றும் தெரிவித்தனர்.
இது குறித்து 35 பக்க உத்தரவில், நீதிபதி ரிஷிகேஷ் ராய் தெரிவித்திருப்பதாவது:-
உண்மை வெளிச்சத்திற்கு வரும்போது, வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் மட்டும் நீதி மேலோங்காது, மாறாக பிரிந்து சென்றவர்களும் நிம்மதியாக உறங்குவார்கள்.
இறுதியில் 'வாய்மையே வெல்லும்'.. பாரபட்சமற்ற விசாரணை மட்டுமே இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் பழி சுமத்தப்படும் அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க செய்ய முடியும்.
அதேபோல், விசாரணையில் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை இருக்கும்போது சாதாரண மனிதர்களின் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை நீதித்துறையில் எதிரொலிக்கும்.
இரு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல், உண்மை சுயமாக நிரூபிக்கப்படுவதை உறுதிபடுத்த வேண்டும். எனவே, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இயற்கைக்கு மாறான மரணம் மற்றும் அதனை சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து வேறு ஏதேனும் வழக்குப்பதிவு செய்யப்பட்டால், அந்த புதிய வழக்கையும் விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது போன்ற வழக்குகளின், விசாரணையில் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கும், முழுமையான நீதியை பெறுவதற்கும், இந்த நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்தின் 142ஆவது பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவது பொருத்தமானது என்று கருதுகிறது.
ஆகவே இந்த விவகாரத்தில் சட்டபூர்வமாக முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இல்லை.
சுஷாந்தின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரும் இந்த வழக்கு விசாரணையின் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். இதன்மூலம் அனைத்து வதந்திகளும் முடிவுக்கு வரும்.
இதற்கு, நியாயமான, திறமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை தேவை. அது தனது ஒரே மகனை இழந்த தந்தைக்கு கிடைக்கும் நீதியின் நடவடிக்கையாக இருக்கும்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
மேலும் பிகார் மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கங்களின் குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி, “இரு மாநிலங்களும் ஒருவருக்கொருவர் எதிராக அரசியல் தலையீடு செய்ததாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. விசாரணையின் உண்மைத்தன்மை ஒரு பிரிவின்கீழ் வந்துள்ளது.
மக்கள் தங்கள் சொந்த கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றனர். இது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.
ஆனால் துரதிருஷ்டவசமாக, விசாரணையை தாமதப்படுத்துவதற்கும் தவறாக வழிநடத்துவதற்கும் வழியை ஏற்படுத்துகின்றன. இத்தகைய சூழ்நிலையில், தீர்வு கிடைக்குமா என்பதில் பாதிக்கப்பட்டவரின் அச்சம் நியாயமானதுதான்” என்றும் நீதிபதி ராய் கூறினார்.
இதையும் படிங்க: 'சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார்'- பாஜக தலைவர் பேச்சு