கரோனா ஊரடங்கால் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொல்ல முடியாத அளவு துயரத்தை சந்தித்து வருகின்றனர். தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றதாலும், பசிக் கொடுமையாலும் அதில் சிலர் உயிரிழக்க நேர்ந்தது. சோனு சூட் இந்த அவலத்தைக் கண்டு சகிக்க முடியாமல் உடனடியாக களத்தில் இறங்கினார். சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு தன்னால் முடிந்த அளவு உதவி வருகிறார்.
சோனு சூட்டின் செயலைப் பார்த்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துவரும் நிலையில், மும்பை வாழ் தமிழர்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வந்த 200 தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்துவந்தனர். இதையறிந்த சோனு சூட், அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப பேருந்து ஏற்பாடு செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவர்களுக்கு வழியில் தேவையான உணவுப் பொருட்களையும் வழங்கினார். இதனால் மகிழ்ச்சியடைந்த மும்பை வாழ் தமிழர்கள், அவருக்கு ஆரத்தி எடுத்து நன்றி தெரிவித்தனர். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.