ஷாருக்கான், கஜோல் நடிப்பில், கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான படம் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே'. இப்படம் அந்த காலகட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்தப் படத்தை ஆதித்யா சோப்ரா இயக்கியிருந்தார். யஷ் ராஜ் பிலிம்ஸ் (ஒய்ஆர்எஃப்) நிறுவனம் தயாரித்திருந்தது.
நான்கு கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், அப்போது 102.50 கோடி ரூபாய் வசூலித்து பெரும் சாதனை படைத்தது. ஆதித்யா சோப்ராவின் முதல் படமான இத்திரைப்படம், இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கிய படங்களில் ஒன்றாக மாறியது. இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
இந்நிலையில், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கஜோல் தற்போது மனம் திறந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' என்றென்றும் இனிமையானது. சிம்ரன் (காஜோல்) கதாபாத்திரம் எப்போதும் மக்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ள கூடிய ஒன்று.
ராஜ் (ஷாருக்கான்) கதாபாத்திரத்தை நிச்சயம் நாம் வாழ்வில் சந்தித்திருப்போம். சிம்ரனுக்கும் ராஜுக்கும் இடையில் இருக்கும் அற்புதமான காதல் தான் இந்த படத்தை இன்றளவும் இனிமையாக வைத்துள்ளது.
மக்கள், சிம்ரன் - ராஜ் கதாபாத்திரத்தை மிகவும் நேசிக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். பல ஆண்டுகள் கழித்து மக்கள் இன்னும் இவர்களை விரும்புகின்றனர். முதலில் சிம்ரன் கதாபாத்திரத்தில் நடிக்க நான் தயங்கினேன்; படிப்படியாக அந்த கதாபாத்திரம் என்னை அறியாமல் எனக்குப் பிடித்துப் போய்விட்டது.
எனக்கு தெரிந்த அனைவரிடமும் ஒரு சிம்ரன் இருப்பதை நான் உணர்ந்துள்ளேன். உங்கள் உள்ளுணர்வு படி இந்த உலகத்தில் நீங்கள் சரியாக வாழ்கிறீர்கள் என்றால் சிம்ரன் உங்களுக்குள் இருக்கிறார்.
அந்த படத்தின் படப்பிடிப்பின் போது நாங்கள் அனைவரும் ஒரு நல்ல படத்தை உருவாக்குகிறோம் என்று நினைத்திருந்தோம். காலம் கடந்து நிற்கும் சிறந்த படைப்பை உருவாக்கியுள்ளோம் என அப்போது நினைக்கவில்லை என்று கூறினார்.
இத்திரைப் படத்தின் வெற்றிக்குப் பின் கஜோல் - ஷாருக் ஜோடி திரையில், மிகப் பிரபலமான ஜோடிகளாக மாறினர்.
இதன் பின் அவர்கள் இருவரும் இணைந்து 'குச் குச் ஹோதா ஹை', 'கபி குஷி கபி காம்', 'மை நேம் இஸ் கான்' போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தனர்.