சான்ஃபிரான்சிஸ்கோ: மெட்டாவுக்கு சொந்தமான மெசெஜிங் செயலியான வாட்ஸ்அப்பில் 'ரிப்போர்ட் ஸ்டேட்டஸ்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப்பில் 'ரிப்போர்ட் (Report)' என்ற பட்டன் கொடுக்கப்படும். வாட்ஸ்அப்பின் விதிமுறைகளை மீறும் வகையிலான கன்டென்ட்டுகளை யாரேனும் ஸ்டேட்டஸ் அப்டேட்டில் பதிவிட்டால், அதனை ரிப்போர்ட் பட்டனை பயன்படுத்தி புகாரளிக்கலாம்.
அந்த புகார் வாட்ஸ்அப்பின் உள்ளடக்க மதிப்பாய்வுக் குழுவிற்கு அனுப்பப்படும். அங்கு அந்த கன்டென்ட் வாட்ஸ்அப் விதிகளை மீறியுள்ளதா? என்று விசாரிக்கப்படும். அதேநேரம் இந்தப் புகார்களை விசாரிக்கும்போது, பயனாளர்களின் பிரைவசியும் பாதுகாக்கப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவன வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த வசதி பீட்டா பயனர்களுக்கு அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த வாரம் சாட் ட்ரான்ஸ்வர் 'Chat Transfer' என்ற வசதியை வாட்ஸ்அப் கொண்டு வந்தது. இந்த வசதி, வாட்ஸ்அப் சாட்களை ஒரு செல்போனிலிருந்து மற்றொரு செல்போனுக்கு மாற்ற உதவுகிறது. இதைப் பயன்படுத்தும்போது பேக்அப் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதேபோல் ப்ராக்ஸி (proxy) என்ற வசதியையும் அண்மையில் வாட்ஸ்அப் வழங்கியது. இதை வைத்து, எந்தவொரு ப்ராக்சி சர்வர் உடனும் வாட்ஸ்அப்பை இணைத்து பயன்படுத்த முடியும். இணைய சேவை தடைபடும்போது இந்த வசதி உதவியாக இருக்கும்.