டெல்லி: பேனசோனிக் நிறுவனத்தின் இரண்டு புதிய ஆண்ட்ராய்டு டிவி தொகுப்புகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பேனசோனிக் நிறுவனம் வீட்டு உபயோகப் பொருட்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறது.
பேனசோனிக் கதை
இதில் இவர்களது டிவிக்கள் மிக பிரபலம். 1955 முதல் தரமான டிவிக்கள் தயாரித்து பயனர்களை மகிழ்வித்து வந்த பேனசோனிக் நிறுவனம், கட்டுக்கடங்காமல் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் கூடிய நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் திணறி வந்தது.
தங்கள் டிவிகளுக்கென தயாரிக்கப்பட்ட பிரத்யேக உதிரிபாகங்கள், ஒளி தளங்கள், பிரதிபலிப்பு தொழில்நுட்பங்கள் என மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த நிறுவனத்தை, ஆண்ட்ராய்டு உடன் கூடிய ஸ்மார்ட் டிவிக்களை, சீன நிறுவனங்கள் குறைந்த விலையில் சந்தையில் களமிறக்கி தோற்கடித்தது.
ட்ரெண்டிங் ஸ்மார்ட் டிவிக்கள்: தி ஃபிரேம் டிவி | சோனி பிரேவியா X90J | சியோமி
முட்டி மோதி பார்த்த பேனசோனிக் முடிவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் கூடிய டிவிக்களை சந்தைப்படுத்த தொடங்கியது. இச்சமயத்தில் வளர்ந்து நிற்கும் விஐ, டிசிஎல், எம்.ஐ போன்ற நிறுவன படைப்புகளை முந்த முடியாமல் பேனசோனிக் திணறியது.
பேனசோனிக் ஆண்ட்ராய்டு டிவி சிறப்பம்சங்கள்
எனினும் தங்களுக்கென உள்ள குறிப்பிட்ட, தரத்தை மட்டும் எதிர்பார்த்திருக்கும் பயனர்களுக்காக புதிய டிவிக்களை நிறுவனம் அறிமுகப்படுத்திவருகிறது. அந்த வகையில் தற்போது ஆண்ட்ராய்டு டிவி சீரிஸ் ஜே.எஸ், ஜே.எக்ஸ் ஆகிய இரண்டு தொகுப்புகளில் 11 டிவிக்கள் களமிறக்கப்பட்டுள்ளது.
இவற்றில் டால்பி விஷன், ஹெக்ஸா குரோமா டிரைவ், சூப்பர் பிரைட் பிளஸ், அக்குவியூ டிஸ்பிளே ஆகிய வசதிகளும் உள்ளன. விலையை பொறுத்தவரை, ஜே.எக்ஸ்., வரிசை டிவிகளின் விலை 51 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, 1.30 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. ஜே.எஸ் வரிசை டிவிகளின் விலை 25 ஆயிரத்து, 500 ரூபாயில் தொடங்கி, 44 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது.
முக்கியமாக அமேசான் அலெக்ஸா, கூகுள் அசிஸ்டெண்ட் உதவியுடன் ரிமோட் இல்லாமல் ஒலி மூலம் டிவியை கட்டுப்படுத்தும் அம்சம் இதில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.