ஈரோடு: பெருந்துறை அருகே உள்ள தோரணாவி தொட்டிபாளையம் கிராமத்தில் உள்ள பட்டா நிலங்களில் கும்பல் கும்பலாக சேர்ந்து காட்டு முயல்களை வேட்டையாடுவதாக, தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் கட்டுப்பாடு கோவை மண்டல அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து இந்த தகவலின்படி, அவர் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பாதுகாவலருக்கு உத்தரவிட்டார். அவரின் அறிவுறுத்தலின்பேரில், ஈரோடு மாவட்ட வனப்பாதுகாப்பு படையினர், ஈரோடு வனச்சரக குழுக்கள், ஈரோடு வனவியல் விரிவாக்க கோட்ட குழுக்கள் உள்பட பல்வேறு வனச்சரக குழுவினர் ஆகியோர் சேர்ந்து தொட்டிபாளையம் கிராமத்துக்கு விரைந்து சென்றனர்.
இதையும் படிங்க:ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருச்சியில் குவிந்த மக்கள்
பின்னர், வாட்ஸ்-அப் செயலி மூலம் காட்டு முயலை வேட்டையாடும் கும்பலை கண்காணித்தனர். இதனைத்தொடர்ந்து வனப்பாதுகாப்பு குழுவினர் தனித்தனியாக பிரிந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள பட்டா நிலங்களில் கும்பல் கும்பலாக சேர்ந்து ஏராளமானோர் காட்டு முயலை வேட்டையாடிக்கொண்டு இருந்ததை குழுவினர் பார்த்தனர். உடனே அந்த கும்பல் வனத்துறையினரிடமிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தனர்.
பின்னர், வனத்துறை அலுவலர்கள் அந்த கும்பலை மடக்கி பிடித்தனர். இந்த வேட்டையில் மொத்தம் 107 பேர் பிடிபட்டனர். இவர்கள் மீது, ஈரோடு வனத்துறையினர், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
இதையும் படிங்க:காமராஜர் பிறந்தநாளை திருவிழாவாக கொண்டாடிய இனாம்கோவில்பட்டி மக்கள்!
பின்னர், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவர்கள் வேட்டையாடி வைத்திருந்த 5 முயல்கள் மற்றும் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கம்புகள் மற்றும் பல பொருட்கள் மேலும் ஏராளமான செல்போன்கள் ஆகியவை வனத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த முதற்கட்ட விசாரணை மேற்கொண்டதில் ஆடி மாதம் கோயில் திருவிழாவையொட்டி ஒருசில சமூகத்தினர் காட்டு முயலை வேட்டையாடுவதற்காக கும்பல் கும்பலாக சேர்ந்து காட்டுப்பகுதிக்கு செல்வார்கள் என்றும், அவ்வாறு சென்றவர்கள் தான் இவர்கள் என்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Video: பழனி அருகே 300 மேற்பட்டோர் அரங்கேற்றிய கும்மியாட்டம்!