திமுக தலைவர் ஸ்டாலின் முதல் அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழி வரை கொங்கு மண்டலத்தில் அதிக பரப்புரைகளை மேற்கொண்டு அதீத கவனம் செலுத்தி வருகின்றனர். அதே போல் கொங்கு மக்கள் தேசிய கட்சியை கூட்டணியில் தக்கவைத்து கொள்வதுடன், கொங்கு மாவட்டத்தில் செல்வாக்குடைய சுற்றுசூழல் ஆர்வலர் கார்த்திகேயன் சிவசேனாபதியை அண்மையில் திமுக தன்வசம் கொண்டது. இதை தொடர்ந்து, அதிமுக கோட்டையாக விளங்கும் கொங்கு மண்டலத்தை வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் திமுக செயல்பட்டுவருகின்றது.
கொங்கு மண்டலங்களில் அதிக தொகுதிகளை பெற்று 'கொங்கு மண்டலம்' எங்கள் கோட்டை என்பதை அதிமுக அனைத்து தேர்தல் வெற்றிகளிலும் நிரூபித்து வருகின்றது. அதிமுக தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வரை அங்கு வெற்றிகளை குவித்து வருகின்றது. கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம், ஈரோடு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை கொண்டு சுமார் 36க்கும் அதிகமான சட்டப்பேரவை தொகுதிகளை கொங்கு மண்டலம் கொண்டுள்ளது. அருந்ததியர் மற்றும் கவுண்டர் சமுதாயம் பெரும்பான்மை சமுதாயமாக உள்ள கொங்கு மண்டலம், சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக உள்ளது.
கடந்த தேர்தல் வரலாறுகளை எடுத்து பார்த்தால் கொங்கு மண்டலம் அதிமுக கட்சிக்கு சாதகமாகவே இருந்து வருகின்றது. 'மதுரை வீரன்' என்பவரை அருந்ததியர் சமுதாயம் குலதெய்வமாக வழிபட்டுவருகிறது. அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் "மதுரை வீரன்" என்னும் படத்தில் நடித்ததன் மூலம் அருந்ததியர் சமுதாய மக்களை கவர்ந்தார். இதனால், அப்போது முதல் இப்போது வரை அதிமுக-விற்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்து வருகின்றது. இதை ஜெயலலிதா-வும் தக்க வைத்து கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தல் வரை கொங்கில் அதிமுக தனது ஆதிக்கத்தை செலுத்திவருகின்றது. இதே போல் கொங்கில் மற்றொரு பெரும்பான்மை சமுதாயமான கவுண்டர் வாக்குகளும் அதிமுக கைவசம் வைத்து கொண்டு திமுக-விற்கு ஆட்டம் காட்டி வந்தது.
இந்நிலையில் வருகின்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று திமுக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. கொங்கு மக்கள் தேசிய கட்சியை தனது கூட்டணியில் தக்க வைத்து கொண்டுள்ளது திமுக. அவர்கள் கேட்கும் தொகுதிகளை கொடுத்து நாமக்கல் மாவட்டத்தில் பெரிய வெற்றியை அடைய திமுக முனைப்பு கட்டிவருகின்றது. மேலும் கொங்கு மண்டலத்தில் நல்ல செலவக்குடைய சமூக ஆர்வலர் கார்த்திகேயன் சிவசேனாபதி திமுக கட்சியில் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதே போல் திராவிட முன்னேற்ற கழகத்தில் பிரபலமான முகங்களான உதயநிதி ஸ்டாலின், கனிமொழி போன்றவர்கள் கொங்கு மண்டலத்தில் அதிக பரப்புரைகளை மேற்கொண்டுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் தனது பங்கிற்கு காணொலி மூலமாக அதிக கூட்டங்களை கொங்கில் நடத்தியுள்ளார்.
அதிமுக-வின் தற்போது அமைச்சரவையில் 7 அமைச்சர்கள் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள். இதை மனதில் வைத்துக்கொண்டே திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டத்திற்கு கூட்டம் அதிமுக அமைச்சர்கள் ஒருவர் கூட வருகின்ற தேர்தலில் வெற்றி பெற கூடாது என கூறிவருகிறார். அதிமுக-வின் கோட்டையாக கொங்கு கடந்த தேர்தல்களில் இருந்தாலும் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் திமுக-விற்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக அமைந்தது. இது தற்போது வருகின்ற தேர்தலிலும் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதை பற்றி நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர் ராமஜெயம், "கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தல் வரை கொங்கு மண்டலத்தின் பெரும்பான்மையான வாக்குகள் அதிமுக கட்சிக்கே கிடைத்துக்கொண்டு இருந்தது. இதற்கு எம்.ஜி.ஆர் நடத்தி படங்கள், அவர் தேர்வு செய்த கதாபாத்திரங்கள் முக்கியமான காரணம். ஆனால் 2011 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அருந்ததியர் சமுதாய மக்கள் வாக்குகள் 50 விழுக்காடு பிரிந்து மாற்று கட்சிகளுக்கு விழுந்துள்ளது. இதே போல் கவுண்டர் சமுதாய வாக்குகளும் பெரிய அளவு பிரிந்து பல கட்சிகளுக்கு செல்ல தொடங்கியது. 3% உள் இடஒதுக்கீட்டை அருந்ததியர் சமுதாயத்திற்கு திமுக கொடுத்ததன் மூலம் அந்த சமுதாய வாக்குகளை பெற தொடங்கியது. கொங்கு மண்டலத்தில் 15 தொகுதிகள் வரை தனி தொகுதிகளாக உள்ளது. இதில் இம்முறை திமுக கட்சிக்கு சாதகமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. பாஜக கட்சி இதை உணர்ந்து மாநில தலைவராக எல்.முருகனை நியமனம் செய்தது, வி.பி.துரைசாமியை தன் கட்சிக்கு இழுத்துக்கொண்டது. ஆனால் பாஜக, கட்சி ரீதியாக அருந்ததியர் சமுதாயத்திற்கு செய்யாததால் அவர்களுக்கு இது பெரிய பலனை தராது" என தெரிவித்தார்.