மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்ற உரையின்படி, நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் வகையில், ‘வெளிப்படையான வரி விதிப்பு - நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஆக. 13) டெல்லியில் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
வெளிப்படையான வரி விதிப்பு திட்டத்தின் மதிப்பீடு ஆக்ஸ்ட் 13ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், அதன் முறையீடு செப்டம்பர் 25ஆம் தேதி பாரதிய ஜன சங் கட்சியின் முன்னாள் தலைவரான தீன்தயாள் உபத்யாயா பிறந்தநாளில் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் தனது உரையில் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்தப் புதிய திட்டம் ஒளிவு மறைவற்றதாக, வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். இணையம் மூலமாகவே அனைத்து கணக்குகளையும் தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யப்பட்ட கணக்கை பரிசீலிப்பதும் யாரென்று தெரியாது. வரி செலுத்துபவர்களுக்கான சலுகை தொகையை திரும்பப் பெறுவதற்கான வழிமுறை எளிதாக்கப்பட்டிருக்கிறது. வெளிப்படையான அமைப்பை உருவாக்குதல், வரி செலுத்துவோருக்கு அதிகாரம் அளித்தல், அவர்களை கவுரவித்தல் என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையுடன் மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்தத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறது” எனக் கூறினார்.
வெளிப்படையான வரி விதிப்பு என்றால் என்ன?
- வரி செலுத்துவோர் வருமான வரி அலுவலகத்துக்கு செல்லாமல், எந்தவொரு அலுவலரையும் சந்திக்காமல் வரியை கணக்கிட்டு இணையம் மூலம் செலுத்த உதவும்.
- வரி செலுத்தும் நடவடிக்கை ஒருங்கிணைந்த கணினி முறையில் இணைக்கப்படுவதால், அலுவலர்களுக்கு வரி செலுத்துவோரிடம் ஏதாவது விளக்கம் கோரினால், அதனை நேரடியாக அலுவலகம் செல்லாமல் இணையம் மூலமாகவே பதில் தரமுடியும்
- வரி விதிப்பு, வரி வசூல், வரிச் சலுகை என அனைத்தையும் இணைய வழியாகவே மேற்கொள்ளலாம்
- கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், வரி செலுத்துவோருக்கு கணினியால் உருவாக்க்கப்பட்ட 20 இலக்க ஆவண அடையாள எண் (DIN) வருமான வரித் துறையினரால் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இந்த 20 இலக்க ஆவண அடையாள எண்கள், வரி செலுத்துவோரின் கணக்கை கணினி தானியங்கியாக செயல்பட்டு ஆராயும்
- இருப்பிட அதிகார வரம்பு முறை இப்போது அகற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த இடத்தில் உள்ள அலுவலர்களும் வரி செலுத்துவதில் உள்ள குளறுபடிகளை விசாரிக்கலாம்.
- ஒரு அலுவலர் மேற்கொண்ட ஆய்வை, தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிற இடங்களில் உள்ள மற்ற அலுவலர்களால் மேலும் மதிப்பாய்வு செய்யப்படும்.
- ஒரு அலுவலர் என்றில்லாமல், பலர் அடங்கிய குழுவாக வரி தொடர்பான வழக்குகளின் மீது ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
- அதாவது, சென்னையில் பதியப்பட்ட வரி தொடர்பான புகார்களை, மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் உள்ள வருமான வரித் துறை அலுவலர்கள் விசாரணை நடத்துவர்.
வெளிப்படையான வரி விதிப்பு முறையீடு என்றால் என்ன?
- மதிப்பீடுகளைப் போலவே, வருமான வரி உத்தரவுக்கு எதிரான எந்தவொரு முறையீடும் வெளிப்படையான முறையில் நடத்தப்படும்.
- ஒரு கணினி இயக்குநகரத்தால் மேல்முறையீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இது தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு திருத்தப்படும்.
- மேல்முறையீட்டை தீர்மானிக்கும் அலுவலர்களின் அடையாளம் வெளிக்கொணரப்படாது.
- மேல் முறையீட்டு முடிவுகளானது, குழு அடிப்படையிலானதாகவும், மதிப்பாய்வு செய்யப்பட்டும் எடுக்கப்படும்.
வெளிப்படையான வரி விதிப்பு திட்டத்துக்கான விதிவிலக்குகள்?
- கடுமையான மோசடிகள், பெரும் பணத்தை வரி ஏய்ப்பு செய்தவர்கள்
- சர்வதேச வரி ஏய்ப்பு
- கறுப்புப் பணம் சட்டம், பினாமி சொத்து வைத்திருப்பவர்கள்
கூடுதல் தகவல்...
வரைமுறைகளுக்கு உள்வராத அனைத்து விதமான வரி தொடர்பான காரியங்களும் பயனற்றதாக கணக்கிடப்படும் என்றும், கள அலுவலர்களால் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. இச்சூழலில் தலைமை ஆணையர் அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலர்களின் ஒப்புதலுக்குப் பிறகு புலனாய்வுப் பிரிவு அல்லது டி.டி.எஸ் பிரிவு மட்டுமே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.