ஹைதராபாத்: ரோகிணி திரையரங்கு வளாகத்தில் நரிக்குறவ பெண் கையில் சினிமா டிக்கெட்டுடன் உள்ளே அனுமதிக்குமாறு கெஞ்சிய காட்சி வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. ஆனால், தெரியவராமல் எத்தனையோ புறக்கணிப்புகளையும், கொடுமைகளையும் இந்த சமூகம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த நரிக்குறவ குடும்பத்தில் ஒரு ஏழெட்டு பேர் டிக்கெட் எடுத்து திரையரங்கு சென்றுள்ளனர்.
கிட்டத்தட்ட 2 ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கும் அந்த குடும்பத்திற்கு, இந்த 2 ஆயிரம் ரூபாய் என்பது அந்த குடும்பத்தின் எத்தனை நாள் உழைப்பு என்பது அவர்களுக்குத்தான் தெரியும். இன்று, யதார்த்தத்தில் ஆறிலக்க சம்பளம் பெறுபவர்களுக்கு கூட குடும்பத்தில் 10 பேரை அழைத்துக் கொண்டு திரையரங்குக்கு செல்ல துணிச்சல் வருமா என்பது சந்தேகம் தான். சொல்லப்போனால், சினிமா வாழ்ந்ததும், வாழ்வதும், வாழப்போவதும் இது போன்று திரையரங்குக்கு வரும் எளிய மனிதர்களால் தான்.
திரையரங்குகளில் தீண்டாமை ஏன் மிகவும் தீவிரமான பிரச்சனையாக கருதப்படுகிறது? கோயில்களிலும் மற்ற பொது இடங்களிலும் தீண்டாமை இருந்த போதே அதனை உடைத்துப் போட்ட இடம் திரையரங்கு தான். சாதிக்கொரு கோயில், சுடுகாடு, டீக்கடைகளில் இரட்டைக்குவளை இருந்த கிராமங்களில் கூட சினிமா கொட்டாய்கள் தான், சமத்துவத்தை முதலில் கொண்டு வந்தன. 25 பைசா கட்டணத்தில் துவங்கிய சினிமா கொட்டாய்கள் இன்று மல்டி பிளெக்ஸ் வடிவெடுத்து குறைந்த பட்சம் 250 ரூபாய் கட்டணத்தில் வந்து நிற்கின்றன.
"கொட்டகை வளந்த பெறகு நாட்டிலே குத்தம் கொறைஞ்சிருக்கு" என்பது வெறும் சினிமா பாடல் வரி மட்டுமல்ல, அன்றாடம் அல்லல் பட்டு உழைக்கும் மனிதர்கள். தன்னை மறந்து வேறொரு உலகத்தை 3 மணி நேரம் வாழும் இடம்தான் திரையரங்குகள். தங்களை சுற்றியிருக்கும் வெறுப்புணர்வுகளை மறந்து கலையை நோக்கிய பயணத்தை சினிமாவைத் தவிர வேறு எதனால் தந்துவிட முடியும்.
ஒரு நாளில் அன்றாடங் காய்ச்சிகளின் மாலை நேர பொழுது போக்காக இருந்த சினிமா இன்று வெகுதூரம் தள்ளி நின்று ஆடம்பர காட்சியாக மாறியுள்ளது. சினிமா பார்ப்பவர்களின் மனநிலை ஒரு புறம் இருக்கட்டும், ஆனால் இந்த சூழல் சினிமாவுக்கே நல்லதல்ல என்பது தான் யதார்த்தம். அடுத்த வேளை உணவுக்கான வழியைக் கூட யோசிக்காத ஒரு குடும்பம் திரைப்படத்திற்காக செலவிடும் தொகை ஒப்பீட்டளவில் மிகப்பெரியது.
சினிமாக்கள் நூறுநாட்கள் ஓடிய நாட்களெல்லாம், இவர்களைப் போன்ற அன்றாடங்காய்ச்சி எளிய மக்களின் பணத்தினால் தானே?, இதனை உணர்ந்தவராகத்தான் இயக்குநர் வெற்றிமாறன் தனது கண்டன பதிவில் நூறாண்டுக்கு முன்னமே தீண்டாமையை உடைத் தெறிந்த திரையரங்கு என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மக்கள் திலகம் என்று போற்றப்பட்ட எம்.ஜி.ஆர். தனது திரைப்படங்களில் நரிக்குறவ மக்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பார். அம்மக்களில் கணிசமானோர் எம்ஜிஆர் ரசிகர்களாக இன்றும் உள்ளனர். நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க என எம்ஜிஆரும் ஜெயலலிதாவும், நரிக்குறவ ஜோடிகளைப் போன்று ஆடிப்பாடியதை மறக்க முடியுமா? மூன்று நாள் ஓடினாலே வெற்றிப்படம் என கருதும் இந்நாளில், தன்னை வாரி அணைக்கத் தயாராக இருக்கும் மக்களை விட்டு தள்ளி நிற்பது சினிமாவுக்கு நல்லதல்ல.
இதையும் படிங்க: ரோகிணி தியேட்டர் சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாதது - நடிகர் விஜய் சேதுபதி ஆவேசம்