சிட்டுக்குருவி... இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு நாம் அபூர்வமாகத் தேடும் பறவையாக மாறப்போகிறது. சுறுசுறுப்பு, இனிய ஓசை, இயல்பான வண்ணம் போன்றவற்றால் மனிதர்களைத் தன்வசப்படுத்திய சிட்டுக்குருவிகள் தற்போது அழிந்துவரும் உண்மையை நாம் அறியவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். இன்று சிட்டுக்குருவிகளைக் காணவேண்டும் என்றால் பல கிலோமீட்டர் தூரம் சென்று தேடி கண்டுபிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகமயமாக்கல் எனும் சக்கரத்தின் கீழ் சிக்குண்ட விஷயங்களில் பறவை இனமும் ஒன்று. பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டினால் பறவைகள் அழிந்து போகின்றன. அந்த வரிசையில் அலைபேசி கோபுரம்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கம் மூலம் சிட்டுக்குருவிகள் அதிகமாக அழிந்து வருகின்றன என்று ஒரு செய்தி இன்றைக்கு மக்களிடையே அதிகம் விவாதிக்கப்படுகிறது. தற்போது எங்குப் பார்த்தாலும் உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் மற்றும் அதன் வட கம்பிகள் தென்படுகிறது.
இந்த வட கம்பியின் மீது பறவைகள் அமர்ந்தால், அதில் வரும் உயர் மின்சாரம் அதன் வெப்பம் பறவைகளைப் பெருமளவில் பாதிக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்நிலையில் மார்ச் 20ஆம் தேதியான இன்று நாடு முழுவதிலும் 'உலக சிட்டுக்குருவிகள் தினம்’ கொண்டாடப்பட இருக்கிறது.
சிட்டுக்குருவி என்ற இந்த ஒரு பறவை மட்டும்தான் மனிதர்களிடத்தில் இணக்கமாக இருக்கக் கூடியது. எங்கெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்களோ அதன் சுற்றுப்புறங்களில் குருவிகள் காணப்படும். சுமார் 10,000 வருடங்களாக இந்தப் பறவை இனம் இருந்துவருகிறது. சரியான உணவு கிடைக்காதது, முட்டையிடுவதற்கான தகவமைப்பு உள்ள இடம் கிடைக்காதது, அலைபேசி கோபுரங்களிலிருந்து வரும் நுண்ணிய கதிரியக்கம் போன்ற பல காரணங்களால் குருவிகள் அழிந்துவருகின்றன.
உணவு சேகரிப்பதைக் கூட சிட்டுக்குருவிகள் சமாளித்துவிடக் கூடும். ஆனால் அவற்றின் இனப்பெருக்கம் தான் கேள்விக்குறி! குருவிகள் முட்டையிடுவதற்கான தகுந்த தகவமைப்பு உள்ள கூடுகளை இன்று எந்த வீடுகளிலும் நீங்கள் பார்த்துவிட முடியாது. அதற்கான முக்கியக் காரணம் மாறிவரும் கட்டட வடிவமைப்புகள். பழங்காலங்களில் ஓட்டுவீடுகளில் சிட்டுக் குருவிகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தது இன்று வரலாறாகதான் நமக்குத் தெரிகிறது. இன்று ஓட்டுவீடுகள் இல்லாமல் கான்கிரீட் காடுகளாகத்தான் காட்சியளிக்கிறது. சிட்டுக்குருவி அழிவதற்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.
தானிய உற்பத்தி குறைவு விவசாய நிலப்பரப்புகள் குறைந்த காரணத்தினால் சிட்டுக்குருவிகளுக்குத் தேவையான உணவு கிடைப்பதில்லை. வயல்களில் கம்பு, சோளம், கேழ்வரகு எனச் சிறுதானிய வகைகளைப் பயிரிடும் விவசாய நிலங்கள் கூட குறைந்துவருவதாலும் உணவின்றி அழிந்துவருகிறது.
சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க சிலர் மாடிவீடுகளில் செயற்கை கூடுகள் அமைத்து குருவிகளுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் தானியங்களை கூடுகளில் நிரப்பிவைத்து சிட்டுக்குருவிகளைக் காக்கும் பணியைச் செய்துவருவது ஒரு ஆறுதலான விஷயம்தான்.
அதுமட்டுமின்றி அழிவின் விளிம்பில் உள்ள அனைத்து குருவிகளையும் காக்க அனைவரும் கூடுவைத்து, சோறுவைத்து, நீர்வைத்து குருவி இனங்களைக் காப்போம் என்பதே சிட்டுக்குருவி தினத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழியாக அமையட்டும்.
வருங்காலங்களில் சிட்டுக்குருவி தினத்தைக் கொண்டாடுவது, அனுசரிப்பது மனிதராகி நம் கையில் தான். சிட்டுக்குருவிகள் அழிவதால், உயிர்நிலை சமன்பாடின்மை ஏற்படக்கூடும்.