லண்டன்: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கரோனாவுக்கான தடுப்பூசி இன்னும் மூன்று மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று பிரிட்டன் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது
உலகம் முழுவதும் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ரஷ்யா, கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்ததாக அதிபர் விளாடிமிர் புட்டின் அறிவித்திருந்தார். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் தடுப்பு மருந்து சோதனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
உலகுக்கு கரோனாவை பரப்பியதாக குற்றஞ்சாட்டப்படும் சீனா இதற்கு மருந்து கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. சீனாவை சேர்ந்த மூன்று நிறுவனங்கள், மூன்றாம் கட்ட தடுப்பு மருந்து சோதனைக்கு தயாராகிவிட்டன. உலக நாடுகளின் தடுப்பு மருந்துகளை உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்துவருகிறது.
இவ்வேளையில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரிட்டன், தடுப்பு மருந்தை இன்னும் மூன்றே மாதங்களில் கண்டுபிடித்துவிடும் என உறுதியாகக் கூறியிருக்கிறது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இதற்கான தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
2021 ஜனவரி மாதம் இந்தத் தடுப்பு மருந்து விற்பனைக்கு வெளியாகும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகளவில் பெரிதாகப் பேசப்படும் ஆஸ்ரா செனேகா தடுப்பு மருந்து, பிரிட்டனில் சோதனை செய்யப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.