டெல்லி: சீன எல்லைப் பிரச்னை தொடர்பாக, பாதுகாப்புக் காரணங்களை கருத்திற்கொண்டு டிக்டாக் போன்ற செயலிகளுக்கு மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் அண்மையில் தடை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது விளையாட்டுப் பயனர்களின் ஆதர்ச விளையாட்டான பப்ஜி உள்பட 118 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பப்ஜி, பப்ஜி லைட், டிக்டாக் விபிஎன், ஏபியுஎஸ் லாஞ்சர், பேரலல் ஸ்பேஸ், லூடோ கிங், வீ-சாட், யூ- டிக்ஷனரி ஆகிய செயலிகளும் அடங்கும்.
இதுகுறித்து மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, இந்தியப் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு ஆகியவற்றை அச்சுறுத்தும் 118 கைப்பேசி செயலிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜூன் 29ஆம் தேதி, கைப்பேசி செயலிகளில் இருந்து அச்சுறுத்தும் தன்மை வெளிப்படுவதை சுட்டிக்காட்டி, 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இதில் இந்தியாவில் அதிக பயனர்களைக் கொண்ட டிக்டாக், ஷேர்இட், யூசி பிரவுசர், கிளப் ஃபேக்டரி, கேம் ஸ்கேனர் ஆகிய சீன செயலிகள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:’இந்தியாவின் செயல் கவலையளிக்கிறது’ - 59 செயலிகள் தடை செய்யப்பட்டது குறித்து சீனா!